Published : 22 May 2020 02:29 PM
Last Updated : 22 May 2020 02:29 PM
கரோனா பொதுமுடக்கம் அனைவரது வாழ்வாதாரத்தையும் அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால், சிறு, குறு தொழில்கள் செய்துவந்த பலரும் மாற்றுத் தொழில்களுக்கு மாறியுள்ள நிலையில், மேடைப் பேச்சை மட்டுமே மூலதனமாகக் கொண்டிருக்கும் தொழில்முறைப் பேச்சாளர்களின் வாழ்வாதாரம் இன்னும் மோசமாகியுள்ளது.
அரசியல், ஆன்மிகம், இலக்கியம், பள்ளி- கல்லூரி விழாக்களின் சிறப்புச் சொற்பொழிவு என மேடைப் பேச்சின் கூறுகளை வகைப்படுத்தலாம். இதில் நெல்லை கண்ணன், சுகிசிவம், நாஞ்சில் சம்பத், திண்டுக்கல் லியோனி, சாலமன் பாப்பையா உள்ளிட்ட பிரபலங்களுக்கு வலுவான பொருளாதாரப் பின்னணி உண்டு என்பதால் அவர்களுக்குக் கரோனாவால் பெரிய அளவுக்குப் பாதிப்பு இருக்காது. ஆனால், அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டுமே மீண்டும், மீண்டும் அழைக்கப்படும் சிறு பேச்சாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது.
கரோனா அச்சத்தால் பொதுக் கூட்டங்கள், சமய விழாக்களை நடத்த அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலை இன்னும் சில மாதங்களுக்கேனும் நீடிக்கும் என்பதால் பேச்சாளர்களின் வருமானம் நிச்சயம் வெகுவாகப் பாதிக்கும். கோயில் திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஆன்மிகச் சொற்பொழிவாளர்களும் மேடைகள் கிடைக்காமல் தடுமாறி நிற்கிறார்கள். அதிலும் குறிப்பாக, பட்டிமன்றங்கள் முற்றாக முடங்கிவிட்டதால் பட்டிமன்றப் பேச்சாளர்களின் குடும்பங்களும் வறுமையில் விழுந்துள்ளன.
இதுகுறித்து பட்டிமன்றப் பேச்சாளர் குமரி ஆதவன் 'இந்து தமிழ்' இணையத்திடம் பேசும்போது, “நான் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன். விடுமுறை நாட்களில் திண்டுக்கல் லியோனி குழுவில் பேசி வருகிறேன். ஆனால், என்னைப் போல் மாற்று வருமானத்துக்கு வழியுள்ள பேச்சாளர்கள் தமிழ்ச் சூழலில் ரொம்ப ரொம்பக் குறைவு.
ஒருவரே பேசி மொத்தக் குடும்பத்தையும் சுமக்கும் ஆண் பேச்சாளர்கள், கணவனை இழந்து பேச்சை மட்டுமே மூலதனமாகக் கொண்டு குடும்பத்தை சுமக்கும் பெண் பேச்சாளர்களும்கூட இங்கு அதிகம். கடந்த இரண்டு மாதங்களாகப் பட்டிமன்றமோ, தனிநபர் சிறப்புப் பேச்சோ நடக்காத நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.
பட்டிமன்றத்தைப் பொறுத்தவரை பிரபலமான நடுவராக இருந்தால் ஒரு பேச்சாளருக்கு 5000 ரூபாய் வரை கிடைக்கும். அதே சின்னக் குழுவாக இருந்தால் ஒரு பேச்சாளருக்கு 1000 ரூபாய்தான் கிடைக்கும். மாதத்துக்குச் சராசரியாக ஏழெட்டு நிகழ்ச்சிகள்தான் இருக்கும். இயல்பாகவே பேச்சாளர்களிடம் கருணை குணமும் அதிகம். அதனாலேயே, தங்கள் வருமானத்தை எளியவர்களுக்கும் கொடுக்கும் வழக்கம் அவர்களுக்கு உண்டு என்பதால் சிறு பேச்சாளர்களிடம் சேமிப்புக் கையிருப்பும் இருப்பதில்லை.
இளைஞர் மன்ற விழாக்கள் தொடங்கி, சிறு நிகழ்ச்சிகளில் வாழ்த்துரை வழங்கச் செல்லும்போது சால்வை மட்டுமே கிடைக்கும்; வேறு வருமானம் இருக்காது. அதேநேரம் சமூக நன்மை, விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்காக மனதாரப் பேசிவரும் பேச்சாளர்களைக் கரோனா கடும் மன உளைச்சலில் தள்ளியிருக்கிறது. ஊரெல்லாம் நம்பிக்கை விதை விதைக்கும் பேச்சாளர்களின் மனம், இப்போது கரோனாவால் வாடிப் போயிருக்கிறது.
எனவே அரசு, பேச்சை மட்டுமே நம்பியிருக்கும் தொழில்முறைப் பேச்சாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சின்னச் சின்ன நிபந்தனைகளோடு சிறு கூட்டங்களை நடத்த அனுமதித்தால் பேச்சாளர்களின் வாழ்வாதாரம் ஓரளவு காக்கப்படும்” என்றார் .
இதேபோல் அரசியல் கட்சிகளின் சிறு பேச்சாளர்களும் கட்சிக் கூட்டங்கள் நடக்காததால் வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT