Published : 22 May 2020 01:53 PM
Last Updated : 22 May 2020 01:53 PM

மதுரையில் குடிநீர் பற்றாக்குறை வராது; விரைவில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் பணிகள் தொடக்கம்: அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல் 

மதுரை

"வைகை அணையில் போதுமான தண்ணீர் இருப்பதால் மதுரைக்கு குடிநீர் பற்றாக்குறை வராது. விரைவில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்படும்" என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி முத்துப்பட்டி குடிசைப்பகுதியில் உள்ள 844 குடியிருப்புகளின் 3800 வீடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் பொடி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் தலைமை வகித்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது;

மதுரை மாநகராட்சியில் மொத்தம் 142 வரையறுக்கப்பட்ட குடிசை பகுதிகளும், 189 வரையறுக்கப் படாத குடிசை பகுதிகளும் உள்ளன. இதில் சுமார் 93,264 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு கரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்காக பொதுமக்களுக்கு 50 கிராம் கபசுரகுடிநீர் பொடி, ஜிங்க் சல்பேட் 150 மி.கி. மற்றும் வைட்டமின் சி 500 மி.கி. ஆகியவை வழங்கப்படுகிறது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 17 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். அதில், 4 லட்சம் குடியிருப்புகள் உள்ளன இவற்றில் 1.50 லட்சம் வீடுகளுக்கு விலையில்லாமல் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மீதமுள்ள 2.50 லட்சம் வீடுகளுக்கு தன்னார்வலர்கள், ரோட்டரி சங்கங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மூலம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

மதுரை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக முதலமைச்சர் வருகின்ற 25ம் தேதி வைகை அணையிலிருந்து குடிநீர் திறந்து வைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதன் மூலம் 20 எம்.எல்.டி குடிநீர் கூடுதலாக கிடைக்கும் மதுரை மாநகர மக்களுக்கு மேலும் இரண்டு மாதங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. பொதுவாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.

இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று இருந்த காரணத்தினால் திருவிழா நடைபெறவில்லை. மதுரை மாநகராட்சி பகுதிகளில் இரண்டு நாளுக்கு ஒரு முறை குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியார் லோயர்கேம்ப் பகுதியில் இருந்து 125 எம்.எல்.டி. குடிநீரை குழாய் மூலம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த குடிநீர் பண்ணைப்பட்டியில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஏற்கனவே வைகை அணையிலிருந்து வரும் பழைய குடிநீர் குழாயில் கொண்டு வராமல் புதிய குடிநீர் குழாய் மூலம் மாநகராட்சியின் 100 வார்டு பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு வருவதற்கு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வொரு வீடுகளிலும் தினந்தோறும் குடிநீர் அவரவர் வீட்டு குழாய்களிலே 24 மணி நேரமும் கிடைக்கும். இதற்காக மூன்று கட்ட டெண்டர் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும்.

மதுரை மாநகராட்சியின் ஒரு சில வார்டுகளில் உள்ள மேட்டு பகுதிகளில் குடிநீர் குழாய்களில் குடிநீர் கொண்டு வருவது சிரமமாக உள்ளதால் பள்ளமான பகுதிகளில் குடிநீர் சென்று விடுகிறது. அதை சீர்செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு மதுரை மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு குடிநீர் தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான குடிநீர் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நகரப்பொறியாளர் அரசு, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் .பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் ஏ.ராஜா, உதவி ஆணையாளர் பி.எஸ்.மணியன், உதவி நகர்நல அலுவலர் வினோத்ராஜா, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x