Published : 22 May 2020 01:00 PM
Last Updated : 22 May 2020 01:00 PM

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்: பொதுமக்களுக்கு காவல் ஆணையர் வேண்டுகோள்

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் கட்டாயம் முக்கக்கவசம் அணிய வேண்டும் என காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்தார்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் மூன்று கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நான்காவது கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் வரும் 31 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், சலூன்கள், திரையரங்குகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில வகைகள் தவிர பெரும்பாலும் தளர்வு நிபந்தனைகளுடன் அமல்படுத்தப்படுகிறது. கரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் அரசும், சுகாதாரத்துறையும் அளித்துள்ள வழிகாட்டுதலின்படி செயல்படவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது, வெளியில் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும், சமூக விலகல் அவசியம், கைகளைச் சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களிலில் முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.100 அபராதம் விதிக்கும் நிலையில் சென்னையில் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளைக் கண்காணித்து போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர். காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது போலீஸார் எடுக்கும் நடவடிக்கையை ஆய்வு செய்தார். முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை கூறி முகக்கவசத்தை வழங்கினார். அவர்களுக்கு மோட்டார் வாகனச்சட்டம் 179-ன் கீழ் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:

''பொதுவெளியில் வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் அதை அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் ஒழுங்கு, போக்குவரத்துக் காவலர்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது.

முக்கக்கவசம் இன்றி வெளியே வருபவர்கள் மீது மாநகராட்சியைப் பொறுத்தவரை இதற்கான அபராதம் விதித்து வருகிறது. மாநகராட்சி மற்றும் போலீஸார் இணைந்து இந்த நடவடிக்கையைக் கொண்டுவந்துள்ளோம். சென்னை முழுவதும் போலீஸார் இவ்வாறு முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

பொதுமக்களிடம் ஒரு வேண்டுகோளாக இதை வைக்கிறேன். தெரிந்தோ தெரியாமலோ கரோனா நம்மிடம் வந்துவிட்டது. அதைத் தடுக்கும் முயற்சியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அதற்குக் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்''.

இவ்வாறு காவல் ஆணையர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x