Published : 22 May 2020 12:23 PM
Last Updated : 22 May 2020 12:23 PM

சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் ஆட்டோ ரிக்‌ஷாக்களை நாளை முதல் இயக்கலாம்: நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி

சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் ஆட்டோ ரிக்‌ஷாக்களை இயக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. நிபந்தனைகளுடன் நேரக் கட்டுப்பாடும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் அறிவிப்பு வருமாறு:

''தமிழக அரசு, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டதோடு மட்டுமல்லாது, கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.

பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொற்றின் தன்மையைக் கருத்தில் கொண்டு, சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. தற்போது, சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகிய வாகனங்கள் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில், மே 23 ( நாளை) அன்று முதல் (தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும்) இயக்க அனுமதிக்கப்படுகிறது.

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zone) ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை இயக்க அனுமதி இல்லை. அப்பகுதிகளில் வாழும் ஆட்டோ/ரிக்ஷா ஓட்டுநர்களுக்கும் இவ்வாகனங்களை ஓட்ட அனுமதி இல்லை.

*பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிடைசர்களை ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும்.

*ஓட்டுநர்களும், பயணியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

* ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை தினமும் மூன்று முறை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

* ஓட்டுநர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவியும், வாகனத்தில் சுகாதாரத்தையும் பேண வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள், முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x