Published : 22 May 2020 12:12 PM
Last Updated : 22 May 2020 12:12 PM
கரோனா வைரஸ் தொற்றால் உலகமே அஞ்சியுள்ள நிலையில், கும்பகோணத்தில் அந்த வைரஸுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட காலம் முதல் அதனைக் கட்டுப்படுத்திட பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, காவல் துறையினர் எனப் பல துறைகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் களப்பணியில் தொடர்ந்து பணியாற்றி வரும் செயல்களை பல்வேறு தரப்பினர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்து சுவரொட்டி ஒட்டி வரும் நிலையில், இந்து மக்கள் கட்சி சார்பில் கரோனாவுக்கு நன்றி தெரிவித்து கும்பகோணம் பகுதியில் போஸ்டர் அடித்து, ஒட்டியுள்ளனர்.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் டி.குருமூர்த்தி கூறியதாவது:
"கரோனா நோய்தொற்று ஏற்பட்ட நாள் முதல் இந்த நோயைக் கட்டுப்படுத்த மாத்திரை, மருந்துகள் இல்லாமல் எதிர்ப்பு சக்தி மட்டுமே பிரதானமாக கருதப்பட்டது. அதற்காக மூதாதையர்கள் பின்பற்றி வந்த தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் மீண்டும் நடைமுறைக்கு வந்தது.
குறிப்பாக, கை குலுக்குவது, கட்டி அணைப்பது புறந்தள்ளப்பட்டு, கைகளைக் கூப்பி வணக்கம் வைப்பது சரியான நடவடிக்கை என அரசு சார்பில் விளம்பரங்களில் ஒளிபரப்பப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்தது.
அதேபோல், மஞ்சள் தேய்த்துக் குளித்தல், பல்வேறு கிராம மற்றும் நகரப் பகுதிகளில் கிருமிநாசினி மருந்தாக வேப்பிலை, மஞ்சள், உப்பு கலந்த தண்ணீரை பல்வேறு இளைஞர்கள் கிராமம் முழுவதும் தெளித்தனர்.
அனைவரும் வேப்பிலையை வீட்டு முன்பாக வைத்தனர். பல்வேறு நகரப்பகுதிகளில் வேப்பிலை விற்பனைக்கு வந்தது. வேப்பிலையின் மருத்துவ குணத்தை மக்களுக்கு உணர்த்தியது.
ஆரம்ப காலங்களில் நம் முன்னோர்கள் நமக்குச் சொன்ன வெளியில் சென்று வந்தால் கை மற்றும் கால்களை சுத்தமாகக் கழுவ வேண்டும் என்ற நடைமுறை மீண்டும் வந்தது.
விவசாயம் சார்ந்த தொழில்கள் மட்டுமே நமக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தி ஆடம்பர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் அடுத்தவருக்கு உதவிட வேண்டுமென மனப்பான்மையை ஏற்படுத்தியது.
குறிப்பாக, கபசுரக் குடிநீர் என்ற எதிர்ப்பு சக்தி உள்ள சித்த மருத்துவம், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நம் பண்டைய கால விளையாட்டுகள் நம் வாழ்வில் ஏற்படும் அர்த்தத்தைக் குறிக்கின்ற வகையில் இருந்து வந்தது குறிப்பாக தாயம், பல்லாங்குழி, கயிறு தாண்டுதல், பரமபதம், பட்டம் விடுதல் போன்ற நம் வாழ்வியலை உணர்த்தும் வகையில் உள்ள விளையாட்டுகள், மீண்டும் நமது இல்லத்துக்கு வந்தடைந்தன.
இந்த கரோனா நோயுற்ற காலத்தில் உலகம் முழுவதும் நமது தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நடைமுறைப்படுத்தியது. பல்வேறு விஷயங்கள் இந்தக் கரோனா தொற்று காலகட்டத்தில் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை அனுபவித்திருந்தாலும், வருங்காலத்தில் நாம் சுத்தமாக இருப்பதும், மேலைநாட்டுக் கலாச்சாரத்தைப் புறந்தள்ளி விட்டு, நமது தமிழர் கலாச்சாரத்தைக் கடைப்பிடித்தாலே நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பதை உணர்த்தும் விதமாக அடிக்கப்பட்ட சுவரொட்டி தானே தவிர வேற எந்த உள்நோக்கமும் இல்லை".
இவ்வாறு குருமூர்த்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT