Last Updated : 22 May, 2020 11:32 AM

2  

Published : 22 May 2020 11:32 AM
Last Updated : 22 May 2020 11:32 AM

மதியம் புகார்; மாலையில்  தீர்வு!- மாணவர்களின் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்த கோவை ஆட்சியர்

கேரளப் பழங்குடி கிராமங்களில் உள்ள 10-ம் வகுப்பு தமிழ் மாணவ மாணவியரின் தேர்வு எழுதும் மையம் தமிழகத்தில் இருக்க, அங்கே செல்வதற்குக் கேரள அதிகாரிகள் தடை விதித்தனர். இந்தப் பிரச்சினையில் உடனே தலையிட்டு கேரளத்தின் பாலக்காடு மாவட்ட ஆட்சியருடன் பேசி அனுமதி உத்தரவு வாங்கித் தந்துள்ளார் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி.

கரோனா ஊரடங்கு காரணமாக கர்நாடக, கேரள, தமிழக, ஆந்திர எல்லைகளில் கெடுபிடிகள் அதிகரித்திருக்கின்றன. சில மீட்டர் இடைவெளி இருந்தாலும் ஒரு மாநில மக்களை இன்னொரு பக்கம் செல்வதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்க மறுக்கிறார்கள். அப்படி உள்ளே செல்ல வேண்டுமென்றால் இரு மாநில அரசுகளின் மாவட்ட ஆட்சியர்களிடமும் இ-பாஸ் பெற வேண்டும்; அப்படி வருபவர்கள் 18 நாள் ‘குவாரன்டை’னில் இருக்க வேண்டும். அதற்கு ஒரு நபருக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றெல்லாம் புதுப்புது உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

இதில் ரொம்பவும் கெடுபிடியாக உள்ள எல்லையாக மாறி வருகிறது கோவைக்கு மேற்கே உள்ள ஆனைகட்டி-அட்டப்பாடி பிரதேசம். தமிழக-கேரள எல்லைப் பகுதியான இங்கு இரு புறங்களிலும் பெரும்பான்மையாய் தமிழர்களே வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் பழங்குடியின மக்களே அதிகம்.

இந்தச் சூழ்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்துத் தமிழக அரசு சார்பில் மாறி மாறி அறிவிப்புகள் வந்தபடி இருக்கின்றன. கரோனா ஊரடங்கு காரணமாய் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுபவர்கள் குறிப்பிட்ட மையங்களுக்குச் செல்வதில் சிக்கல்கள் இருப்பதால் மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஆனைகட்டி அரசு பழங்குடியினர் உயர் நிலைப்பள்ளியில், கேரளத்தின் அட்டப்பாடி பகுதிகளில் உள்ள சோலையூர், தாசனூர், கோட்டத்துறை போன்ற பல்வேறு கிராமங்களில் உள்ள பழங்குடி மாணவ மாணவியர் 21 பேர் படிக்கின்றனர். அவர்கள் இங்கே வந்துதான் தேர்வு எழுதி ஆக வேண்டும். அதேபோல் இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தள்ளியுள்ள தமிழகக் கிராமமான சின்னத்தடாகம் மேல்நிலைப்பள்ளியில் 15 பேர் 11-ம் வகுப்பு தேர்வு எழுத வேண்டும். இவர்கள் கேரள அரசின் சோதனைச் சாவடியில் இதற்காக அனுமதி கேட்டபோதும் சரி, உள்ளூர் கிராம அதிகாரிகளிடம் பேசியபோதும் சரி அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி

அங்கே போனால் அங்கேயே இருந்துகொள்ள வேண்டும்; பிறகு கேரளத்திற்குள் வந்தால் 18 நாள் குவாரன்டைனில் இருக்க வேண்டும் என்றெல்லாம் கேரள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதற்குச் சம்மதித்தபோதும்கூட மாணவ மாணவிகளுக்கு அனுமதி கொடுக்க மறுத்து வந்துள்ளனர். தகவலறிந்த ஆனைகட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மூலம் ஊடகங்களில் செய்தி பரவியது. இந்தத் தகவல் கோவை ஆட்சியர் ராஜாமணிக்கும் சென்றது.

உடனே இதைப் பற்றிய விவரங்களை வாங்கிக்கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர், பாலக்காடு மாவட்ட ஆட்சியரிடம் பேசி மாணவர்களுக்கு அனுமதி பெற்றுத் தந்துள்ளார். இந்த விவகாரத்தை வெளியே கொண்டுவந்த ஆனைகட்டி பகுதி தன்னார்வலர் ஜோஸ்வாவிடம் இதுபற்றிப் பேசினேன்.

ஜோஸ்வா

“முதலில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கேரள அரசு அதிகாரிகளைச் சந்தித்து விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். ‘இ- பாஸ் வேண்டும் என்றால் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்தான் போய் வாங்க வேண்டும்; அப்படியே வாங்கினாலும் ஆனைகட்டி பள்ளிகளுக்குச் செல்ல அட்டப்பாடி வழியாக அனுமதிக்க வாய்ப்பு இல்லை. பாலக்காடு வழியாகக் கோவை வழியாகத்தான் போக வேண்டும்’ என்று கேரள அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்டதுமே பெற்றோர்கள் மனதளவில் தளர்ந்துவிட்டார்கள். ஏனென்றால் அட்டப்பாடியிலிருந்து ஆனைகட்டி சோதனைச் சாவடி வழியில் பள்ளிக்கு வந்தால் இந்த மாணவ-மாணவிகளுக்கு 2 கிலோ மீட்டர் முதல் 10 கிலோ மீட்டர் வரைதான் பயணிக்க வேண்டியிருக்கும். அதுவே கேரள அதிகாரிகள் சொன்னது போல் அட்டப்பாடியிலிருந்து மன்னார்காடு, பாலக்காடு, வாளையாறு, கோயமுத்தூர் என போனால் 190 முதல் 200 கிலோ மீட்டர் கடக்க வேண்டும். அதுவும் பெரும்பாலும் முழுக்க மலைப் பிரதேசம். இந்தத் தகவல் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்துக்குச் சென்றதும், உடனே அவர் பாலக்காடு மாவட்ட ஆட்சியரிடம் பேசி பழங்குடி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத அட்டப்பாடி- ஆனைகட்டி வழியாகவே பள்ளிக்கு வந்து செல்ல உரிய உத்தரவை வாங்கிக் கொடுத்துவிட்டார். நேற்று மதியம்தான் இந்த விஷயம் கோவை ஆட்சியரின் கவனத்திற்குச் சென்றது. மாலையில் தீர்வு கிடைத்துவிட்டது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் ஜோஸ்வா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x