Published : 22 May 2020 10:34 AM
Last Updated : 22 May 2020 10:34 AM
திமுகவில் சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாகவும், பாஜகவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டால்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என்றும் பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
திமுகவில் 1989-91 வரையும், 2006-11 வரையும் துணை சபாநாயகராகப் பொறுப்பு வகித்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்த இவர், திமுகவின் முக்கியப் பொறுப்பான துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார்.
ராசிபுரத்தைச் சேர்ந்த வி.பி.துரைசாமி அதே ஊரைச் சேர்ந்த முருகன் பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றதை வரவேற்று வாழ்த்து தெரிவிக்க தனது மகனுடன் சமீபத்தில் கமலாலயம் சென்றார். அதுமுதல் பிரச்சினை அதிகரித்தது. வி.பி.துரைசாமி சமீபகாலமாக கட்சி மீதான அதிருப்தியில் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் விருப்பப்பட்ட இடத்தில் போட்டியிட சீட்டு ஒதுக்காத நிலையில், கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்த அவர், சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி.க்கான சீட்டைக் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு ஒதுக்காமல் அந்தியூர் செல்வராஜுக்கு அது அளிக்கப்பட்டது. இந்நிலையில், பாஜக தலைவர் முருகனைச் சந்தித்தது திமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
முரசொலி விவகாரத்தில் முருகனின் செயல்பாட்டால் கடும் அதிருப்தியில் இருக்கும் திமுக தலைமை, இதை ரசிக்கவில்லை. இந்நிலையில் நேற்று பேட்டி அளித்த வி.பி.துரைசாமி, பாஜக தலைவர் முருகனைச் சந்தித்தது குறித்தும் நியாயப்படுத்திப் பேசியிருந்தார்.
இதனால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வி.பி.துரைசாமியின் பதவி நேற்று பறிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக, அந்தியூர் செல்வராஜ் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று (மே 22) பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில், வி.பி.துரைசாமி பாஜகவில் முறைப்படி தன்னை இணைத்துக்கொண்டார்.
முன்னதாக, வி.பி.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
திமுக உங்களை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியுள்ளதே?
அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகிக்கொள்கிறேன் என நானே அவருக்கு (ஸ்டாலின்) கடிதம் எழுதினேன். அதுதான் மரியாதை.
திராவிட இயக்கத்திலிருந்து மாற்று சிந்தனை உள்ள பாஜகவில் இணைவது குறித்து...
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பவர்கள் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கத்திலிருந்து பிறழும்போது, நான் வேறு இடத்திற்குச் செல்வதில் என்ன இருக்கிறது?
உங்களிடம் விளக்கம் கேட்கப்படாமல் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
அதுசம்பந்தமாக அவர்களிடம் நான் எதுவும் கேட்க விரும்பவில்லை. சண்டை போட விரும்பவில்லை. சட்ட ரீதியான நடவடிக்கைகளைக் கேட்க விரும்பவில்லை. அவர்களுடைய கட்சி அது. அவர்களுக்கு எல்லா அதிகாரங்களும் உள்ளன. எல்லா அதிகாரங்களையும் கருணாநிதி, க.அன்பழகன் உயிருடன் இருக்கும்போதே ஸ்டாலின் எடுத்துக்கொண்டார். அதற்கு உள்ளே நான் போக விரும்பவில்லை. என்னுடைய பாதை இனிமேல் வேறு. நல்ல இடத்திற்குச் சென்று சேர வேண்டும் என்பது என் எண்ணம்.
திமுகவில் சாதிப் பாகுபாடு காட்டப்படுகிறதா?
இதனை ஒரு லட்சம் தடவை கேட்டிருப்பீர்கள். நானும் பதில் சொல்லிவிட்டேன். சாதிப் பாகுபாடு நன்றாகப் பார்க்கிறார்கள். அங்கு சாதிக்கு ஒரு நீதி.
பாஜகவின் கொள்கைகள் குறித்து...
பாஜகவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டால்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும்.
இவ்வாறு வி.பி.துரைசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT