Published : 21 May 2020 05:39 PM
Last Updated : 21 May 2020 05:39 PM

15-வது நிதிக்குழு கூட்டம்: மாநில வரிப் பங்கை கணிசமாக உயர்த்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

15-வது நிதிக்குழுக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மாநிலங்களின் நிதி நெருக்கடியைத் தவிர்க்க, தற்போதைய வரிப் பங்கான 41 சதவீதத்திலிருந்து கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் வரி வசூலிக்கும் கட்டமைப்பில், பெருமளவிலான வரியை மத்திய அரசு பெறுகிறது. ஆனால், பெருமளவிலான செலவுப் பொறுப்புகளை மாநில அரசுகள்தான் செய்ய வேண்டும்.

மொத்த வரி வருவாயை எந்த அளவுக்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் பகிர்ந்துகொள்வது என்பதை முடிவுசெய்ய வேண்டியிருக்கிறது. மாநிலங்களுக்கென ஒதுக்கப்படும் நிதியில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதியை ஒதுக்க வேண்டும் என்பதையும் கணக்கிட வேண்டும். இதைச் செய்வதற்காகத்தான் நிதிக் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

15-வது நிதி குழு என்.கே. சிங்கைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதிக்குழு 2020-21ஆம் ஆண்டுக்கான இடைக்கால பரிந்துரைகளை கடந்த பிப்ரவரி 1-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

இறுதி அறிக்கை, அதாவது 2021-26 ஆம் ஆண்டுக்கான பரிந்துரைகள் இந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதியன்று சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிநிலை ஒருங்கிணைப்புத் திட்டமிடலுக்காக 15- வது நிதிக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலமாக நடைபெறவுள்ளது.

நிதிக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின்படி, மாநிலங்களால் எந்த அளவிற்குக் கடன் மற்றும் பற்றாக்குறை அளவுகளைச் சமாளிக்க முடியும் என்பது குறித்தும் பங்கு, செயல்திறன் உள்ளிட்டவை குறித்தும் பரிந்துரைகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கு செய்யப்பட்டிருக்கும் பரிந்துரைகளில், முக்கியமான பரிந்துரையாக மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 2015-20 காலகட்டத்தில் மாநிலங்களுக்கு 42 சதவீத வரிப் பகிர்வு இருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான வரிப் பகிர்வு 41 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மொத்த வரியில் ஒரு சதவீதம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசங்களான ஜம்மு - காஷ்மீர், லடாக் பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மாநிலங்களின் நிதி நெருக்கடியைத் தவிர்க்க, தற்போதைய வரிப் பங்கான 41 சதவீதத்திலிருந்து கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“ஊரடங்கு காரணமாக மாநிலங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், 15-வது நிதிக்குழுவின் இன்றைய கூட்டத்தில் வரிகளை முறையாகப் பகிர்ந்தளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

— M.K.Stalin (@mkstalin) May 21, 2020

நிதி நெருக்கடியைத் தவிர்க்க, மாநிலங்களின் தற்போதைய வரிப் பங்கான 41 சதவீதத்திலிருந்து கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x