Last Updated : 21 May, 2020 03:17 PM

 

Published : 21 May 2020 03:17 PM
Last Updated : 21 May 2020 03:17 PM

நாளை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 2-ம் ஆண்டு நினைவு தினம்: ஊரடங்கால் பொது அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு தடை- 1000 போலீஸார் பாதுகாப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நாளை (மே 22) அனுசரிக்கப்படுகிறது.

கரோனா ஊரடங்கு காரணமாக அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது.

வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து நாளையோடு (மே 22) இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.

இந்த துயரச் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்ட போதிலும், மக்கள் மனதில் நீங்காத வடுவாக தொடர்கிறது. இந்த ஆண்டு கரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு பொது அஞ்சலி நிகழ்ச்சிகள் கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் இந்த ஆண்டு போராட்டங்கள் நடைபெற்ற கிராமங்களில் மட்டும் நாளை (மே 22) காலை உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை வைத்து சமூக இடைவெளியை கடைபிடித்து ஐந்து, ஐந்து பேர்களாக பங்கேற்று அஞ்சலி செலுத்தவுள்ளோம்.

மேலும், இன்றைய தினத்தை கறுப்பு தினமாக கடைபிடித்து அனைவரும் கறுப்பு முகக்கவசம் அணியவுள்ளோம். கடந்த ஆண்டு நடைபெற்றது போல இந்த ஆண்டு தேவாலயங்களில் சிறப்பு அஞ்சலி வழிபாடுகள் போன்ற பொது நிகழ்ச்சிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இன்றைய நாளை உயிர் சூழல் நாளாக கடைபிடிக்க அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். வீடுகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபடவும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளோம்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடைபெறும் சிபிஐ விசாரணை, ஒருநபர் ஆணையம் விசாரணை போன்ற அனைத்து விசாரணைகளும் வெறும் கண்துடைப்பு தான். இரண்டு ஆண்டுகள் ஆகியும் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதுபோல உயிரிழந்தவர்களுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் என்றுமே மக்கள் மனதில் அழியாத கறுப்பு மையாக மாறிவிட்டது என்றார் அவர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் 5 பேருக்கு மேல் யாரும் கூடக்கூடாது.

எனவே, அஞ்சலி நிகழ்ச்சிகளுக்காக பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை ஏற்கனவே மூடப்பட்டிருப்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. துப்பாக்கிச் சூடு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x