Published : 21 May 2020 11:49 AM
Last Updated : 21 May 2020 11:49 AM
தான் பாஜகவுக்கு செல்லப் போவதாக எழும் செய்திகள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி விளக்கம் அளித்துள்ளார்.
திமுக துணைப் பொதுச்செயலாளர், முன்னாள் துணை சபாநாயகர் என்ற பெருமையோடு திமுக மேடைகளை அலங்கரித்து வருபவர் வி.பி.துரைசாமி. திடீரென தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை அவர் சந்தித்ததன் மூலம், பாஜகவுக்கு துரைசாமி தாவப்போகிறார்; திமுகவில் அதிருப்தியில் இருக்கிறார் என அவரைச் சுற்றி அரசியல் வட்டாரத்தில் பல தகவல்கள் உலா வரத் தொடங்கிவிட்டன. இந்த வேளையில் வி.பி.துரைசாமி தொலைபேசி வாயிலாக 'இந்து தமிழ் திசை'யிடம் பேசினார்.
தமிழக பாஜக தலைவர் முருகனை திடீரென சந்தித்ததன் பின்னணியில் நீங்கள் பாஜகவுக்குப் போவதாகச் சொல்லப்படுகிறதே?
நாங்க இரண்டு பேரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அந்த வகையில் அவருக்கு வாழ்த்து சொல்லத்தான் சந்தித்தேன். இது அரசியல் ரீதியிலான சந்திப்பே இல்லை. முருகன் என்னுடைய சொந்தக்காரர். பிராமணர் கட்சியில் அருந்ததியருக்கு தலைவர் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை வாழ்த்தப்போனால் என்ன தவறு?
சந்திப்புக்குப் பிறகு உங்கள் செல்போனை 'ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டீர்களே?
அதெல்லாம் ஒன்றும் இல்லை. தேவையற்ற அழைப்புகள் நிறைய வருகின்றன. அதைத் தவிர்க்கத்தான் 'ஸ்விட்ச் ஆஃப்' செய்தேன்.
முருகன் தலைவராகப் பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது ஏன் சந்திக்க வேண்டும்?
ஏனென்றால், கரோனா வைரஸ்தான் காரணம். வீட்டு வாயிலைத் தாண்டி எங்கும் நான் போகவில்லை. கடைசியாக மார்ச் 20-ம் தேதி வெளியில் வந்தேன். அதன் பிறகு எங்கும் செல்லவில்லை. ஆனால், அம்பேத்கர் பிறந்த நாள், சின்னமலை பிறந்த நாள், மே தினம் நிகழ்ச்சிகளுக்கு திமுகவில் என்னை அழைத்தார்கள். நானும் சென்றுவந்தேன்.
உங்களுக்கு எம்.பி. பதவி கிடைக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறதே..?
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. தொடர்ந்து விடாமல் நான் கட்சி அலுவலகத்துக்கு வந்துகொண்டுதான் இருந்தேன். மார்ச் மாதம் வரை அலுவலகத்துக்கு வந்திருக்கிறேன். கட்சி அலுவலகத்தில் வருகைப் பதிவேட்டைப் பார்த்தால் அது தெரியும்.
பாஜக தலைவருடனான சந்திப்புக்குப் பிறகு திமுகவில் யாரும் உங்களை அணுகினார்களா?
யாரும் என்னை அணுகவில்லை. நான் என்ன முடிவெடுத்தாலும் அவரிடம் பேச வேண்டாம் என்று அவர் (ஸ்டாலின்) சொன்னதாக வாட்ஸ் அப்பில்தான் சில செய்திகளைப் பார்த்தேன்.
முரசொலி நில விவகாரத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் மூலம் திமுகவுக்குக் குடைச்சல் கொடுக்கப்பட்டது.. (கேள்வியை முடிப்பதற்குள் பேசுகிறார்)
அதற்கும் இந்தச் சந்திப்புக்கும் என்ன தொடர்பு? முதலில் தலைவர் கோபத்தில் இருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாது. முரசொலி விவகாரத்தில் சட்டத் துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் வெற்றி பெறலாமே. அது வேறு; முரசொலியைப் பார்த்துதானே தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டோம்.
உங்களைச் சுற்றிப் பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இப்போதைய நிலையில் என்ன செய்வதாக உத்தேசம்?
இப்போதைக்கு நான் அமைதியாக இருக்கப்போகிறேன். என் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.
மாற்று முகாமுக்குச் செல்வீர்களா?
இல்லை... இல்லை... அவர்களுடைய நடவடிக்கைகளைப் பொறுத்துதான் என்னுடைய முடிவு இருக்கும். நான் யதார்த்தமாகத்தான் போய் சந்தித்தேன். ஆனால், அவர் (ஸ்டாலின்) அருகில் உள்ள அரசியல் விற்பன்னர்கள் அவரிடம் என்ன சொல்கிறார்களோ, அதன்படி அவர் நடப்பார்.
ஸ்டாலின் அருகில் உள்ளவர்கள், அவரைக் கெடுக்கிறார்கள் என்கிறீர்களா?
(ஆங்கிலத்தில் சொல்கிறார்: He is individually good; but collectively bad) அவர் தனிப்பட்ட முறையில் நல்லவர். என் மீது மரியாதை, அன்பு, பாசம் உள்ளவர்தான் தலைவர். அதெல்லாம் மறுப்பதற்கில்லை. அதேபோல என் மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டு வந்தது உண்டா?
நாமக்கல் மாவட்டத்தில் திடீரென்று ஒருவரை நீக்குவார். இன்னொருவரைப் போடுவார்; இவரை மாற்றலாமா என்றுகூட ஒரு வார்த்தை கேட்க மாட்டார். ஆனாலும், இதுவரை மாவட்ட நிர்வாகமாக இருந்தாலும் சரி; மாநில நிர்வாகமாக இருந்தாலும் சரி; கட்சி நிர்வாகத்தில் நான் தலையிட்டதே இல்லை. இவருக்குப் பதவி கொடுங்கள்; இன்னாரைத் தூக்குங்கள் என்று நான் கேட்டதேயில்லை.
நாமக்கல் மாவட்டச் செயலாளர்கள் மாற்றங்களில் உங்களுக்கு அதிருப்தி இருந்ததாக கூறப்படுகிறதே.
அது அவர்கள் கட்சி. அதில் நான் ஒரு 'சர்வண்ட்'. என்றபோதும் சிலரை மாற்றும்போது என்னிடம் ஒரு வார்த்தைகூட கேட்பதில்லையே என்று சிறு வருத்தம் இருந்தது உண்மைதான். அது கட்சிக்கு வெளியே கூட எல்லோருக்கும் தெரியும். இதே விஷயத்தில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, துரைமுருகனை மீறி நடப்பார்களா?
இந்த விவகாரத்துக்குப் பிறகு நீங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தீர்களா?
இல்லை. செய்திகளில்தான் சில தகவல்களைப் பார்க்கிறேன். நோட்டீஸ் அனுப்பி என்னிடம் விளக்கம் கேட்க தலைவர் முடிவு செய்திருப்பதாகப் பார்த்தேன். இன்னும் சில செய்திகளில், நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல், கட்சியிலிருந்து நீக்கலாம் என்று அவர் சொன்னதாகவும் செய்திகளைப் பார்த்தேன்.
அதுபோல நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?
அப்படியெல்லாம் சொல்கிறார்கள். அப்படியே நடவடிக்கை எடுத்தாலும் நான் என்ன செய்ய முடியும்?
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், இந்தச் சர்ச்சை எழுந்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கருணாநிதிதான் எனக்குக் கடவுள். கட்சியில் என்னுடைய விசுவாசம் எல்லோருக்கும் தெரியும். நான் எம்.பி. பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு கட்சிக்கு வந்தவன். என்னை நம்பி வந்தவனுக்குதான் சீட்டு கொடுப்பேன் என்று எனக்கு கருணாநிதி சீட்டு கொடுத்திருக்கிறார். அந்த அளவுக்கு அவரிடம் நான் விசுவாசமாகவும் நம்பிக்கையுள்ளவனாகவும் இருந்திருக்கிறேன்.
இங்கே ஒரு விஷயத்தைக் கேட்க விரும்புகிறேன். இதுவரை எந்த முடிவை துரைசாமியை வைத்துக்கொண்டு எடுத்தார்கள். அதை துரைசாமி வெளியே சொன்னான் என்று யாராவது என்னை சொல்ல முடியுமா? எந்த நல்ல முடிவாக இருந்தாலும் சரி, எந்த கெட்ட முடிவாக இருந்தாலும் சரி, அதெல்லாம் வீட்டில்தான் எடுக்கப்பட்டது. அப்போதெல்லாம் என்னை யாரும் வீட்டுக்கு அழைத்ததில்லை.
உதயநிதியை இளைஞர் அணி தலைவராக நியமித்தபோது வரவேற்றிருந்தீர்களே?
வரவேற்றது மட்டும் இல்லை.. எம்.பி. பதவிக்காக வயது வித்தியாசம் பார்க்காமல் உதயநிதியை நேரில் சந்தித்துக் கெஞ்சினேன். அது தப்பு இல்லை. ஏனென்றால், கட்சி அவர்களுடையது.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ப.தனபால் போல சபாநாயகராகும் வாய்ப்பு உங்களுக்கு இருந்ததே..?
எனக்கு யார் சீட்டு கொடுக்கப்போகிறார்கள்? அப்படியே கொடுத்தாலும் கேட்ட தொகுதி கிடைக்காது. வெற்றி பெற்றாலும் அமைச்சர் பதவியெல்லாம் கிடைக்காது. சபாநாயகர் பதவிக்காக எனக்கு வெற்றிலையில் 10 ரூபாய் வைத்துக் கொடுத்தாலும் எனக்கு வேண்டாம்.
எனக்கும் கருணாநிதிக்கும் ஒரு விஷயத்தில் சண்டை வந்தது. கலெக்டரை தாசில்தாரை ஆக்குற மாதிரி, என்னை துணை சபாநாயகர் ஆக்கிட்டீங்களே என்று நான் கேட்டேன். இது எனக்கும் கருணாநிதிக்கும் மட்டுமே தெரியும். நான் அவர் (ஸ்டாலின்) மீது மரியாதை வைத்திருக்கிறேன். இந்தப் பதவியெல்லாம் கருணாநிதி கொடுத்தது. கருணாநிதிக்கு விசுவாசமாக இருந்தேன்; இப்போது விசுவாசமாக இல்லையா என்பதுதான் என்னுடைய ஒரே கேள்வி!
இவ்வாறு வி.பி.துரைசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT