Published : 21 May 2020 07:25 AM
Last Updated : 21 May 2020 07:25 AM
சேலத்தில் இருந்து வடமாநிலத் தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். இதையடுத்து, தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால், உள்ளூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கூலித் தொகையை உயர்த்தியுள்ளனர்.
தமிழகத்தில் ஊரடங்கில் இருந்து சில முக்கிய பணிகளுக்கு தளர்வு ஏற்பட்ட நிலையில், வெள்ளித் தொழில், கட்டிட பணி, எலக்ட்ரிக்கல், பிளம்பிங், ஏசி மெக்கானிக் உள்ளிட்ட பணிகள் அன்றாடம் நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
கடந்த மார்ச் தொடங்கி தற்போது வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. தொடர்ந்து வரும் மே 31-ம் தேதி வரை ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இதனால், சேலத்தில் வெள்ளிப்பட்டறை, கட்டுமானத் தொழில், டைல்ஸ் பதிப்பு, ஃபர்னிச்சர், எலக்ட்ரிக்கல், பிளம்பிங், ஏசி மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால், உள்ளூரில் உள்ள தொழிலாளிகள் தங்கள் கூலித் தொகையை உயர்த்தி வாங்கத் தொடங்கியுள்ளனர். கட்டுமானப் பணியில் ஈடுபடுபவர்கள் முதல் அனைத்து கூலிப் பணியாளர்களும் தங்களது கூலியை 50 சதவீதம் வரை உயர்த்தி கேட்டு வாங்கி வருகின்றனர்.
இதுகுறித்து கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, “‘வடமாநில தொழிலாளிகள் குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், உள்ளூர் தொழிலாளர்கள் பலருக்கும் பணி வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. தற்போது, வடமாநிலத் தொழிலாளிகள் சொந்த ஊர் திரும்பிய நிலையில், உள்ளூர் தொழிலாளிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், தொழிலாளர்கள் கூலியை அதிகப்படுத்தியுள்ளனர். இந்த கூலி உயர்வால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT