Published : 20 May 2020 09:22 PM
Last Updated : 20 May 2020 09:22 PM

மதுரையில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 406 பேருக்கு ரூ.40,600 அபராதம்

மதுரை 

மதுரையில் இன்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 406 நபர்களுக்கு மாநகராட்சி ரூ.40,600 அபராதம் விதித்துள்ளது.

‘கரோனா’ பரவலைத் தடுக்க பொது இடங்களுக்கு வரும்போது மக்கள் முகக்கவசம் அணிந்து வருமாறும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், அணியாவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் விசாகன் அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று முதல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்காக உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில் சுகாதார அலுவலர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

1-வது மண்டலத்தில் 35 பேர்களிடம் ரூ.3 ஆயிரத்து 500, 2வது மண்டலத்தில் 115 பேர்களிடம் ரூ.11 ஆயிரத்து 500, 3வது மண்டலம் பகுதியில் 37 பேர்களிடம் ரூ.3,700, 4வது மண்டலம் பகுதிகளில் 219 பேரிடம் ரூ.21 ஆயிரத்து 900 என மொத்தம் 406 பேரிடம் நேற்றுஒரே நாளில் ரூ.40,600 அபராதம் விதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x