Published : 20 May 2020 07:12 PM
Last Updated : 20 May 2020 07:12 PM
குறுவை சாகுபடிக்கு காரைக்காலுக்குக் கிடைக்க வேண்டிய ஒரு டிஎம்சி தண்ணீரை தமிழக அரசுடன் பேசிப் பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (மே 20) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி, கரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு கரோனாவால் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால், வெளியிலிருந்து வருவர்களுக்குதான் அந்த பாதிப்பு உள்ளது. கரோனா தொற்றானது பரவலாக வரும், அது தணியாது என்று பல கணிப்புகள் வருகின்றன.
அகில இந்திய அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது. இறப்பு விகிதம் 3 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் கரோனா தாக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது. அது இந்தியாவின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொண்டு இருக்கிறது.
அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளனர். அது மனிதனுக்குக் கொடுக்கப்பட்டு வெற்றிகரமாக வந்துள்ளது எனக் கூறுகின்றனர். ஆனால், அந்த மருந்தானது இந்தியாவுக்கு எப்போது வரும், எந்த அளவில் கரோனா தாக்கத்தைத் தடுத்து நிறுத்தும் என்று நம்மால் கணிக்க முடியவில்லை.
இந்தியாவிலும் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கின்ற வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. கரோனா தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், மிகக் குறுகிய காலத்தில் அதற்கான மருந்தைக் கண்டுபிடித்தால் அதன் மூலமாக கரோனா நோயை நீக்குவதற்கு வாய்ப்பாக அமையும்.
மத்திய அரசு கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ரூ.20 லட்சம் கோடியைத் தருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5 நாட்கள் பேட்டி கொடுத்தார். அதில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்னவென்றால், வங்கிகள் மூலமாக தொழிற்சாலைகளுக்குக் கடன் கொடுப்பது, ஏற்கெனவே வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு காலக்கெடு கொடுப்பது, சிறு, குறு தொழில்களுக்குத் தாராளமாக நிதி கொடுப்பது, விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி கொடுப்பது ஆகியவைதான்.
ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுப்பதைத் தவிர அவர்களது கையில் பணத்தைக் கொடுப்பதற்கான எந்த உத்தரவும் மத்திய நிதி அமைச்சரகம் போடவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முழுமையான திட்டம் எதுவும் இல்லை.
மார்ச் 25 ஆம் தேதி முதல் மூடிய தொழிற்சாலைகள், கடைகள், தொழில் நிறுவனங்களால் அரசுக்கு வருவாய் இல்லை. இப்போது, ஊரடங்கைத் தளர்த்தி இருந்தாலும் கூட சகஜ வாழ்க்கை திரும்பவில்லை. எனவே, மத்திய அரசானது மாநிலங்களுக்குத் தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என பிரதமருடன் காணொலியில் உரையாடும்போது கூறியுள்ளேன்.
புதுச்சேரிக்கு ஜிஎஸ்டிக்கான இழப்பீட்டைக் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நிதி ஆதாரத்துக்கான நிதியை வழங்க வேண்டும் என ஏற்கெனவே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதுவரை அதற்கு பதில் வரவில்லை. மேலும், கரோனா சம்பந்தமான கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். இடைக்காலமாக ரூ.200 கோடி என மொத்தமாக ரூ.995 கோடி கொடுக்க வேண்டும் எனவும் கடிதம் எழுதி இருந்தேன். அதற்கும் பதில் வரவில்லை.
அனைத்து மாநிலங்களும் நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மத்திய அரசானது செவிசாய்க்காமல் இருப்பது வருத்தத்துக்குரியது. உடனடியாக மத்திய அரசு இதையெல்லாம் கருத்தில் கொண்டு மாநிலங்களுக்கு உதவி செய்ய வேண்டும். பல மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாமல் இருந்து வருகின்றன. மத்திய அரசின் உதவியின்றி மாநில அரசுகள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது.
இப்போது நாம் நாட்டில் உள்ள பத்திரிகைகள் எல்லாம் நலிந்துள்ளன. பத்திரிகைகளின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகளின் உரிமையாளர்கள் அமைப்பு பிரதமரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். அந்த மனுவை பிரதமர் பரிவோடு கவனித்து பத்திரிகைத் துறைக்கும் மிகப்பெரிய அளவில் உதவி செய்ய வேண்டும்.
மேட்டூர் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த குறுவை சாகுபடிக்கு காரைக்காலுக்கு ஒரு டிஎம்சி தண்ணீரைக் கொடுக்க வேண்டும். இந்த உத்தரவை தமிழக அரசு மதித்துச் செயல்பட வேண்டும்.
இது சம்பந்தமாக அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அதில், காரைக்காலுக்கு தண்ணீர் வர தமிழக அரசுடன் பேசி ஆயத்தப் பணிகளைச் செய்ய வேண்டும், இதற்காக பொதுப்பணித்துறை, வேளாண் துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம், கடலூரில் கரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரி மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். இன்னும் ஒரு மாதத்துக்கு நிறைய பேருக்கு கரோனா அறிகுறி வரும் என்று கூறுகின்றனர். எனவே, புதுச்சேரி மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்லக் கூடாது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT