Published : 20 May 2020 05:52 PM
Last Updated : 20 May 2020 05:52 PM
கோவை மாவட்டத்தில் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் மக்கள், ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்து வருகிறார்கள். சிலர் வித்தியாசமான அணுகுமுறையால் கவனம் ஈர்ப்பதும் உண்டு. அந்த வகையில், கரோனா வைரஸ் வேடத்தில் இன்று ஆட்சியர் அலுவலகம் வந்து பரபரப்பூட்டினர் சில நடனக் கலைஞர்கள்.
இன்று காலையில் கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு, கரோனா வைரஸ் வடிவத்தில் வண்ணமயமாக வந்த நடனக் கலைஞர்கள், ‘கரோனா பொதுமுடக்கக் காலத்தில் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் நாங்கள் நடத்தி வரும் நடனக் கலைக் கூடங்களை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அவர்களிடம் பேசினோம். ''கரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக வருமானமே இன்றி முடங்கிக் கிடக்கிறோம். இந்தக் கலையை நம்பி உள்ள நடனக் கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நடனக் கலைஞர்கள் நலிவடைந்துவிடாமல் பாதுகாக்கும் நோக்கில் ‘சேவ் & சப்போர்ட் டான்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கியிருந்தோம். இதன் மூலமாக 2 மாதங்களாக நடனக் கலைஞர்களுக்கு நிவாரண உதவிகள் கிடைத்துவந்தன. ஆனால், இப்படியே எத்தனை நாளைக்கு இருக்க முடியும்?
கோவை மாநகரில் 45 நடன ஸ்டுடியோக்கள் வைத்துள்ளோம். அவை அனைத்தும் வாடகைக் கட்டிடத்தில்தான் செயல்பட்டு வருகின்றன. அந்த வாடகையில் இரண்டு மாதங்களுக்கு விலக்கு அளிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் தொழிலை நம்பி ஒப்பனை செய்யும் 25 குடும்பங்களும் உள்ளன. அவர்களும் பிழைக்க வேண்டும். எனவே, விரைவில் எங்கள் நடன நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள ஆட்சியர் அனுமதிக்க வேண்டும்” என்றனர்.
முகக்கவசம் அணிந்தபடி, மஞ்சள், பச்சை, வெள்ளை எனப் பல்வேறு வண்ணங்களுடன் கரோனா வடிவத்தில் வந்திருந்த நடனக் கலைஞர்களைப் பலரும் வியப்புடன் பார்த்துச் சென்றார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT