Published : 20 May 2020 03:23 PM
Last Updated : 20 May 2020 03:23 PM

அச்சு ஊடகங்களின் நெருக்கடிகளைக் களைய பாமக துணை நிற்கும்; அன்புமணி உறுதி

அன்புமணி உடனான சந்திப்பில் 'இந்து' என்.ராம் உள்ளிட்டோர்.

சென்னை

அச்சு ஊடகங்களின் நெருக்கடிகளைக் களைய பாமக துணை நிற்கும் என்று பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி இன்று (மே 20) வெளியிட்ட அறிக்கை:

"இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாகத் திகழும் ஊடகங்கள், கரோனா நோய்ப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. நாடு நெருக்கடிகளைச் சந்திக்கும்போது, அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கு துணை நிற்கும் ஊடகங்களே இப்போது நெருக்கடியைச் சந்திக்கும் நிலையில், அவற்றுக்கு உதவ வேண்டியது அரசின் கடமையாகும்.

ஊடகங்களில் அச்சு ஊடகங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. அவை குறித்து விளக்குவதற்காக 'தி இந்து' குழுமத்தின் தலைவர் என்.ராம் உள்ளிட்டோர் இன்று காலை என்னை எனது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள்.

பொருளாதார மந்தநிலை காரணமாக அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள் குறித்தும், அவற்றைக் களைய அரசுத் தரப்பிலிருந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் விரிவாக விளக்கினர்.

1. செய்தித்தாள்களை அச்சிடுவதற்கான நியூஸ் பிரிண்ட் காகிதம் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்.

2. அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் விளம்பரங்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

3. அரசு ஊடகங்களின் விளம்பரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டும்.

ஆகியவைதான் அச்சு ஊடகத்துறையினரின் முதன்மையான கோரிக்கைகளாகும். இது தொடர்பாக பிரதமருக்குக் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அக்கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

எனது இல்லத்தில் இருந்தவாறே பாமக நிறுவனர் ராமதாஸை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் குறித்து அவர்கள் விளக்கினார்கள்.

அதைக் கேட்ட ராமதாஸ், "ஊடகங்கள் எப்போதும் எங்கள் கூட்டணித் தோழர்கள். அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் அனைத்தையும் நான் அறிவேன். மிகவும் நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் ஊடகங்களுக்கு பாமக துணை நிற்கும்.

அச்சு ஊடகங்களின் பிரச்சினைகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசுகிறேன்; அவருக்குக் கடிதம் எழுதுகிறேன். அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் அனைத்து நெருக்கடிகளையும் களைவதற்கு பாமக நடவடிக்கை எடுக்கும்" என்று உறுதியளித்தார்.

ராமதாஸ் கூறியதைப் போலவே அச்சு ஊடகங்கள் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருவது உண்மை; அதேபோன்று அவர்கள் அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை.

செய்தித்தாள்களின் தயாரிப்புச் செலவு அதன் விற்பனை விலையை விட பல மடங்கு அதிகம் எனும் நிலையில், அதிக அளவில் விளம்பரங்கள் வந்தால் மட்டும் தான் தயாரிப்புச் செலவுக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசத்தை சமன் செய்ய முடியும்.

பொருளாதார நிலைமை சரியாகி தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள் வருவதற்கு இன்னும் பல மாதங்களோ, சில ஆண்டுகளோ ஆகக்கூடும் என்பதால் அதுவரை அச்சு ஊடகங்களுகு அதிக விளம்பரங்கள், அதிக விளம்பரக் கட்டணம் ஆகியவற்றின் மூலம் ஆதரவளிக்க வேண்டியது அரசின் தார்மீகக் கடமை ஆகும். இதை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி, ஊடகங்களுக்கு உதவும்படி பாமக வலியுறுத்தும்.

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இந்தியா எப்போது மீளும்? கரோனா பாதிப்பு மற்றும் பொருளாதார மந்தநிலையைச் சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அச்சு ஊடகக் குழுவினரும் நானும் விவாதித்தோம். வெகுவிரைவில் அனைத்துச் சிக்கல்களும் தீரும்; இயல்பு நிலை விரைவில் திரும்பும் என்று நம்புகிறேன்".

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x