Published : 20 May 2020 03:15 PM
Last Updated : 20 May 2020 03:15 PM

உயர்மின் கோபுரம் அமைவதால் விளைநிலம் பாதிப்பு: நிவாரணம் கோரி விவசாயி குடும்பத்துடன் ஆட்சியரிடம் மனு

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி சம்பத்குமார் தனது குடும்பத்துடன் இன்று மனு அளிக்க வந்தார்.

திருப்பூர்

உயர்மின் கோபுரம் அமைவதால் விளைநிலம் முழுமையாகப் பாதிக்கப்படுகிறது என, உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயக் குடும்பம் திருப்பூர் ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளது.

தாராபுரம் வட்டம் குழந்தைபாளையம் சம்பத்குமார், தனது மனைவி ரேணுகாதேவி மகன் சிவதத்குகன் ஆகியோர் திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் இன்று (மே 20) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

"குண்டடம் அருகே மானூர்பாளையம் கிராமத்தில் 4.40 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், பவர்கிரிட் நிறுவனம் உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக எனது நிலத்தை எடுத்துக்கொண்டது. நிலத்தில் கிணறு மற்றும் தானிய சேமிப்புக் கிடங்கும் உள்ளது.

உயர்மின் பாதை அமைவதால் எனது 4.40 ஏக்கர் நிலம் மற்றும் கட்டமைப்புகளைப் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நிலத்தை முழுமையாக இழந்துவிட்ட நிலையில், குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், ஒரு நிவாரணத்தை அரசு எனக்கு வழங்க வேண்டும்.

2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி மேற்கண்ட எனது நிலம் முழுமைக்கும் சந்தை மதிப்பில் இழப்பீடு நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். எனது நிலத்தில் 3 வயதுடைய 160 தென்னங்கன்றுகள் உள்ளன. இதற்கு தலா ஒரு மரத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எனக்கு ஒரு தென்னங்கன்றுக்கு ரூ.31 ஆயிரத்து 50 வழங்க வேண்டும்.

எனது 15 வயது மகன் சிவதத்குகனுக்கு மூளைக் குறைபாடு நோய் உள்ளதால், மருத்துவச் செலவுக்கு மாதந்தோறும் பெரும் தொகை செலவு செய்கிறோம். பெண் குழந்தையும் உள்ளது. ஆகவே, நோயால் பாதிக்கப்பட்ட மகன் மற்றும் மகளின் கல்வி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி உரிய நிவாரணத் தொகையை ஆட்சியர் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்"

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மனுவைப் பெற்ற திருப்பூர் ஆட்சியர், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தார். முன்னதாக நேற்று முன்தினம் தனது நிலத்தில் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, தனது குடும்பத்துடன் சம்பத்குமார் போராடியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x