Published : 20 May 2020 01:35 PM
Last Updated : 20 May 2020 01:35 PM
கரோனா நோய்த்தொற்று சிகிச்சையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதில் முக்கியமானது இந்தியாவிலேயே இறப்பு விகிதத்தைக் குறைத்தது நமது சாதனை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில் கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகம் உள்ளது. முக்கியமாக ராயபுரம், கோடம்பாக்கம், திருவிக நகர், தேனாம்பேட்டை உள்ளிட மண்டலங்களில் நோய்த்தொற்று அதிகம் உள்ளது. இந்நிலையில் சென்னையில் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக 167 வார்டுகளில் குறைந்த அளவிலேயே தொற்றுள்ளவர்கள் உள்ளனர்.
மீதமுள்ள 33 வார்டுகளைக் கணக்கில் வைத்து சென்னை மாநகராட்சி நமது சென்னை தடுப்புத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
''மண்டலம் 3,4,5,6 -ல் நமது சென்னை தடுப்புத்திட்டம் பெயரில் மாநகராட்சி, சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று யாருக்கேனும் லேசான காய்ச்சல், லேசான இருமல், சளி, காய்ச்சல் இருந்தாலோ உடனே சோதனை செய்கிறோம்.
கண்காணிப்புப் பகுதியில் காவல்துறை உதவியுடன் கண்காணிப்புத் தடுப்புகள் அமைத்து மாநகராட்சி ஊழியர்கள் மூலம் உள்ளே இருக்கும் மக்களுக்கு வீடு வீடாகச் சோதனை நடத்தப்பட உள்ளது. மாநகராட்சி சார்பில் 26 லட்சம் முகக்கவசங்கள் வழங்க முடிவெடுக்கப்பட்டு அதுவும் வழங்கப்பட்டு வருகிறது. கபசுரக் குடிநீரும் கொடுக்கிறோம்.
இது தவிர மாநிலம் முழுவதும் ஒவ்வொரு பிரச்சினைக்காகவும் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் அளிக்கும் பரிந்துரைப்படி அரசின் செயல்பாடுகள் வகுக்கப்படுகின்றன. சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை 33 வார்டுகள் தவிர மற்ற வார்டுகளில் 10-க்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை உள்ளது.
அந்தப் பகுதிகளில் பொதுமக்கள் அரசு சொல்லும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சில பகுதிகள் அரசுக்குச் சவாலாக உள்ளன. அதிக பரவலுக்குக் காரணமே தொற்றுள்ளவர்கள் குடும்பத்துக்குள் வரும் தொடர்பால் பரவுதல், நோய்த்தொற்றுள்ளவர்களுடனான தொடர்புகள்தான். நோயுற்றவர்கள் யார் யாருடன் தொடர்பு வைத்துள்ளார்கள் என அவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதை முதல் நடவடிக்கையாக எடுத்து வருகிறோம். அதற்காகத்தான் தற்போது 33 வார்டுகளைச் சோதனை செய்கிறோம். வீடு வீடாகச் சென்று சோதனை செய்கிறோம்.
நான்கு மண்டலங்களில் குறிப்பிட்ட ஏரியாக்களைத் தேர்வு செய்து அங்கு ஆய்வு செய்து அங்குள்ள மக்களை நேரடியாக ஆய்வு செய்கிறோம். தினமும் தொற்று உள்ள ஏரியாக்களில் சோதனை செய்கிறோம். சிலர் விதிகளை மீறி கண்காணிப்புப் பகுதிகளுக்குள் செல்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் சொல்வது முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்பதே.
200 வார்டுகளை தீவிரமாகக் கண்காணிக்கிறோம். தொற்று வந்தால் எப்படி வருகிறது என தினமும் ஆய்வு செய்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கிறோம். அனைத்து தீவிர சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக்கான சிகிச்சையில் உள்ளவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்கிறோம். தொற்றால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் சோதனை நடத்தப்படுகிறது.
சோதனைச் சாவடிகளில் வருபவர்களை நிறுத்தி சோதனை நடத்தப்படுகிறது. விமானத்தில் வந்த அத்தனை பேரையும் பரிசோதனைக்கு உட்படுத்துகிறோம். சமீபத்தில் 186 பேர் விமானத்தில் வந்தனர். அதில் 4 பேருக்குத் தொற்று இருந்தது. அவர்களைச் சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு மீதியுள்ள 182 பேரை தனிமைப்படுத்தி மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ஒருவாரம் கழித்து அவர்களைச் சோதித்து தொற்றில்லாதவர்களை வீட்டுக்கு அனுப்பச் சோதனை செய்தபோது அவர்களில் 26 பேருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ரயிலில் வருபவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்துகிறோம். கர்ப்பிணிகள் பிரசவத்துக்கு 5 நாட்கள் முன் பரிசோதனை செய்கிறோம். பிளாஸ்மா தெரபி, மருந்து கண்டுபிடிக்க நமக்கு ஒப்புதல் வந்துள்ளது. மரண விகிதத்தை நாங்கள் குறைப்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். கேன்சர், அறுவை சிகிச்சையில் உள்ளவர்கள், எச்ஐவி, காசநோய் வந்தவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குச் சிகிச்சை அளித்துப் பாதுகாத்துள்ளோம்.
மருத்துவமனைகள், படுக்கை வசதிகளை அதிகப்படுத்தியுள்ளோம். 11 பேர் கொண்ட கமிட்டியை நேற்று அமைத்துள்ளோம். நீண்டகால நோயாளிகள், கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளிகளை சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட பல சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளோம். சிக்கலான, சவாலான பலருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளோம். இறப்பு விகிதத்தை குறைத்துள்ளது சாதாரண விஷயமல்ல''.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அவருடன் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT