Published : 20 May 2020 07:51 AM
Last Updated : 20 May 2020 07:51 AM
திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி. இவர் சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார். அண்மையில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அதே சமுதாயத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜூக்கு அப் பதவியை ஸ்டாலின் வழங்கினார். இதனால், துரைசாமி அதிருப்தியில் இருந்து வந்தார்.
திமுக பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. அப்போது துணைப் பொதுச் செயலாளர் உட்பட முக்கிய பதவிகளும் மாற்றியமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வி.பி.துரைசாமிக்குப் பதிலாக அந்தியூர் செல்வராஜ் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட இருப்பதாக திமுகவில் பேசப்படுகிறது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை அக்கட்சித் தலைமை அலுவலகத்துக்கே சென்று வி.பி.துரைசாமி சந்தித்துள்ளார். தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவராக முருகன் இருந்தபோது முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் தொடர்பான விவகாரத்தை விசாரித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.
இதுபோன்ற சூழ்நிலையில் கட்சித் தலைமைக்குத் தெரியாமல் முருகனை வி.பி.துரைசாமி சந்தித்திருப்பது திமுக தலைமையை கோபமடையச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் கேட்டு வி.பி.துரைசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர்.
இது குறித்து திமுக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘முருகனை சந்தித்ததன் மூலம் பாதை மாறுவது என்று வி.பி.துரைசாமி முடிவு செய்து விட்டதாகத் தெரிகிறது. எனவே, அதற்கேற்ப கட்சி நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT