Published : 19 May 2020 04:01 PM
Last Updated : 19 May 2020 04:01 PM
கடந்த சில தினங்களுக்கு முன்பு, நாகை மாவட்டத்தை சேர்ந்த கனகா என்ற சிறுமி, சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார். ஆசை ஆசையாய்ச் சேமித்த பணத்தை அள்ளித்தந்த அந்தச் சிறுமிக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்து அவர் ஆசையை நிறைவேற்றி இருக்கிறது காவல் நண்பர்கள் குழு.
நாகை மாவட்டம் காமேஷ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை. கூலித் தொழிலாளியான இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கான்க்ரீட் கருவியை இயக்கும்போது ஏற்பட்ட விபத்தில் ஒரு கையை இழந்தவர். இவர் நாகை மாவட்டக் காவல் துறையின் கீழ் செயல்படும் காவல் நண்பர்கள் குழுவில் (Friends Of Police) இணைந்து கரோனா தடுப்புப் பணியில் செயல்பட்டு வருகிறார். இவரது 10 வயது மகள் கனகா.
தனது தோழிகளைப் போலத் தானும் பள்ளிக்குச் செல்வதற்காக சைக்கிள் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் கனகா. தந்தைக்கு நிரந்தர வருவாய் இல்லாத நிலையில் எப்படி சைக்கிள் வாங்குவது என்று யோசித்தவர், தந்தை தனக்குத் தரும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்களை சிறுகச் சிறுகச் சேமிக்கத் தொடங்கினாள். இந்த நிலையில், கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், முதல்வரின் நிவாரண நிதிக்கு பல தரப்பினரும் நிவாரணம் கொடுத்து வருவது குறித்தும் அன்றாடம் தொலைக் காட்சி செய்திகளில் பார்த்திருக்கிறார் கனகா.
கரோனா பாதிப்பால் ஏழை மக்கள் படும் துயரத்தை தாங்க முடியாத அந்தச் சிறுமி, தான் ஆசையாக சைக்கிள் வாங்குவதற்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுக்க விரும்புவதாக தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த தந்தை பூமாலை, மகளின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்து மாவட்ட ஆட்சியரைக் குடும்பத்துடன் சென்று சந்தித்து சிறுமி சிறுகச், சிறுக சேமித்த 2,210 ரூபாயை முதல்வரின் நிவாரண நிதிக்காக அளித்தார்.
இந்த நிலையில், சிறுமியின் இந்தச் செயலை கேள்விப்பட்ட தமிழ்நாடு உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறை இயக்குநர் டாக்டர் பிரதீப் வி.பிலிப் மற்றும் நாகை மாவட்டக் காவல் நண்பர்கள் குழுவினர் சிறுமியின் சைக்கிள் வாங்கும் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார்கள்.
இதற்காக அவர்கள் தங்களுக்குள் நிதி திரட்டி, கனகாவுக்கும் அவரது சகோதரன் கோகுலுக்கும் சேர்த்து இரண்டு புதிய சைக்கிள்களை வாங்கியிருக்கிறார்கள். அந்த சைக்கிள்களை நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் நேற்று அந்த சிறுபிள்ளைகளுக்கு வழங்கினார்.
சிறுமியின் செயற்கரிய செயலும் அதற்கு எதிர்வினை ஆற்றி அவரின் ஆசையை நிறைவேற்றி வைத்த காவல் நண்பர்கள் குழுவின் பெருந்தன்மையும் கரோனா காலத்து கல்வெட்டுகளில் நிச்சயம் இடம்பிடிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT