Published : 19 May 2020 02:36 PM
Last Updated : 19 May 2020 02:36 PM
வங்கக் கடலில் உருவாகி சூப்பர் புயலாக உருவெடுத்துள்ள உம்பன் புயல், நாளை இரவு கொல்கத்தா அருகே கரையைக் கடக்கும் என நாகை மாவட்டத்தைச் சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளரான ஆசிரியர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வரும் செல்வக்குமார், கடந்த காலங்களில் வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் மற்றும் பருவ மழை ஆகியவற்றைத் துல்லியமாகக் கணித்துச் சொல்லி இருக்கிறார். இவரது கணிப்புகள் பெரும்பாலும் அப்படியே நடக்கின்றன.
இந்நிலையில், தற்போதைய உம்பன் புயல் பற்றி செல்வக்குமார் தெரிவித்துள்ளதாவது:
''தற்போது சூப்பர் புயலாக உருவெடுத்திருக்கும் உம்பன் புயல் இன்று ஆந்திர மாநிலம் காக்கிநாடாவுக்கு கிழக்கே வங்கக் கடலில் உள்ளது. தற்போதைய வேகம் 260 கிலோ மீட்டர் ஆக இருக்கிறது. இந்த வேகம் போகப்போக இன்னும் குறையும். நாளை மதியம் மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிற்கு கிழக்குப் பகுதியை மையமாகக்கொண்டு பலத்த சூறைக்காற்று வீசத் தொடங்கும். அப்போது ஒடிசாவின் வடக்குப் பகுதி, வங்கதேசம் ஆகிய பகுதிகளில் பலத்த சூறைக் காற்று வீசும்.
நாளை இரவு இன்னும் சற்று செயலிழந்து சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் கல்கத்தா அருகே கரையைக் கடக்கும். அங்கிருந்து வங்கதேசம், மேகாலயா, அசாம் வழியாக பூடான் வரை செல்லும். வலுவிழந்து அங்கெல்லாம் மழையைக் கொடுக்கும். இந்தப் புயலால் ஆந்திரா மற்றும் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
எனினும் அடுத்து வரும் மே 20, 21, 22 ஆகிய மூன்று நாள்களும் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும். சென்னையில் வெப்பம் 40' செல்சியஸ் முதல் 42' செல்சியஸ் வரை இருக்கும். வேலூர், திருத்தணி, திருச்சியில் வெப்பம் 40' செல்சியஸாக ஆக இருக்கும். இந்த வெப்பநிலையானது மே 23-ம் தேதிக்குப் பிறகு கடற்காற்றின் வருகையால் குறையும்.
மே 26 -ல் தமிழகத்தில் ஆங்காங்கே மழை இருக்கலாம். மே 27 முதல் ஜூன் 3-ம் தேதி முடிய சென்னை முதல் தூத்துக்குடி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் காற்று சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக இடிமழை பெய்யும். தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரை ஜூன் 3 மற்றும் 4-ம் தேதிக்குள் கேரள, தமிழக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடங்கும். தமிழகத்தில் வெப்பச் சலன மழையும் தொடரும்''.
இவ்வாறு செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT