Published : 19 May 2020 01:27 PM
Last Updated : 19 May 2020 01:27 PM
இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனையை அதிமுக அரசு, எந்தச் சூழ்நிலையிலும் ஒப்புக் கொள்ளக் கூடாது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மே 19) வெளியிட்ட அறிக்கை:
"இந்தியாவிலேயே முதன்முறையாக, அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கிய கருணாநிதியின் முன்னோடித் திட்டத்தை, கரோனா பேரிடரை 'நல்ல சமயம் இது; நழுவ விடக்கூடாது' என்றெண்ணி, அதைத் தவறாகப் பயன்படுத்தி, ரத்து செய்ய அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய பாஜக அரசுக்குத் திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1989-ம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, 1990 முதல், தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் இந்த இலவச மின்சாரத் திட்டம் விவசாயிகளுக்கு ஒப்பற்ற திட்டமாக இன்றளவும் இருந்து வருகிறது.
சிறப்புப் பொருளாதார உதவித் திட்டம் என்று அறிவித்து, தனியார்மயத்திற்கு சிவப்புக் கம்பளத்தை அனைத்துத் துறைகளிலும் விரிக்க முயன்றிருக்கும் மத்திய அரசு, 'எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம்' என்ற வஞ்சக நோக்குடன், மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை, தங்களுடைய 'அஜெண்டா'வுக்குப் பயன்படுத்திக் கொள்வதை, ஏற்றுக்கொள்ள முடியாது.
'கரோனா பேரிடரை முன்னிட்டு மாநில அரசுகள் அதிக கடன் வாங்கிக் கொள்ளலாம்' என்று அனுமதி அளித்த கையோடு, 'அந்தக் கடனைப் பெற வேண்டும் என்றால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று நிபந்தனை விதிப்பது மத்திய, மாநில உறவுகளுக்கு கிஞ்சித்தும் பொருத்தமானது அல்ல!
ஏற்கெனவே, தாங்க முடியாத கடன், விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லாமல் தவிப்பு, வாழ்வாதாரம் இழந்ததால் தற்கொலை எனப் பல துயரங்களையும், இன்னல்களையும் தொடர்ந்து அனுபவித்து வரும் விவசாயிகள் மீது நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கருணையற்ற பேரிடர் தாக்குதல் இது!
கரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நிதி நிலைமையைச் சீர்செய்ய அனுமதி கேட்கும் மாநிலங்களிடம், 'நீங்கள் கடன் பெற வேண்டும் என்றால் முதலில் மின்சார மானியத்தை ரத்து செய்யுங்கள். அதுவும் 2020 டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஒரு மாவட்டத்திலாவது செயல்படுத்திக் காட்டுங்கள்' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிபந்தனை விதிப்பது, மத்திய அரசின் மனதிற்குள் அரவம் போல் புகுந்திருக்கும் கந்துவட்டி மனப்பான்மையைக் காட்டுகிறது.
அதைவிட, 'கூட்டாட்சித் தத்துவம் கிலோ என்ன விலை' என்ற பிற்போக்குத்தனமான எண்ணத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே காரணத்தால், அதிகார ஆட்டம் போடுகிறது மத்திய பாஜக அரசு என்பதை வெளிப்படுத்துகிறது.
'மாநிலங்கள் மத்திய அரசின் அடிமைகளாக இருக்க வேண்டும்' என்று, மக்களின் துயரமான காலகட்டத்திலும் மத்திய அரசு நினைப்பது, இந்தியத் திருநாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பிற்கே விடப்பட்டிருக்கும் சவாலாகவே இருக்கிறது.
கட்சி சார்பற்ற முறையில் அனைத்து மாநிலக் கட்சிகளும் எதிர்த்து ஒருங்கிணைந்து போராடிட வேண்டிய ஒரு சூழ்நிலையை மத்திய பாஜக அரசே திட்டமிட்டுத் திணித்து வருகிறது என்றே தோன்றுகிறது.
இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்யும் நோக்கில், 2020-ம் ஆண்டு புதிய மின்சார திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து, ஊரடங்கு நேரத்திலும் அதன் மீது மாநிலங்களிடம் கருத்து கேட்டிருக்கும் மத்திய அரசு, அச்சட்டத்தை நிறைவேற்றும் முன்பே, மின்சார மானியங்களைப் பறித்துக் கொள்ளும் குறுக்குவழிகளைக் கடைப்பிடிப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
வெள்ளைக்காரத் துரைத்தனத்தை நினைவுபடுத்தும் இந்தக் கெடுபிடியான உத்தரவு, விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை மட்டுமின்றி, நெசவாளர்கள் மற்றும் வீட்டுப் பயனாளிகள் உள்ளிட்ட இலவச மின்சாரத்தை அனுபவித்து வரும் பல தரப்பட்ட நுகர்வோருக்கும் மிகப்பெரிய ஆபத்தாக மாறியிருக்கிறது. ஆகவே, இந்த மானியம் ரத்து செய்யும் நிபந்தனையை மத்திய பாஜக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கரோனாவினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க, கடன் வாங்க நினைக்கும் அதிமுக அரசு முதலில் நிதிநிலை அறிக்கையில் அறிவித்த தற்போதைக்கு அவசரமில்லாத திட்டங்களையும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு காலத்திலும் விடப்படும் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு டெண்டர் போன்றவற்றையும் தள்ளி வைக்க வேண்டும்.
கடன் வாங்குகிறோம் என்ற பெயரில், தமிழ்நாட்டில் 21 லட்சத்திற்கும் மேலான விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்தையோ அல்லது வேறு நுகர்வோருக்கான இலவச மின்சாரத் திட்டத்தையோ ரத்து செய்ய அதிமுக அரசு, எந்தச் சூழ்நிலையிலும், எக்காரணத்தைக் கொண்டும் ஒப்புக் கொள்ளக் கூடாது.
மாநில அரசுகளுக்கு 'கரோனா கடன்' வாங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏதோ ஒப்புக்காகக் கடிதம் மட்டும் எழுதிவிட்டு, நிறுத்திக் கொள்ளாமல், அதற்குரிய அழுத்தமும் கொடுத்து, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இலவச மின்சாரத் திட்டத்தைப் பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய பாஜக ஆட்சியைப் பகைத்துக் கொண்டால், ஆட்சியையும் அதிகாரத்தையும் பலி கேட்பார்களோ என்று பயந்து, சுயநலம் கருதி சும்மா இருந்து விடாமல் அவர்களுடைய பேராதிக்கப் போக்கை எதிர்த்து, ’உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை’ என்று முழங்க வேண்டும்; விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் உள்ளிட்டவற்றை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்ற தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பை அதிமுக அரசு நிறைவேற்றிட நெஞ்சுயர்த்தி நிற்க வேண்டும்!
என்ன செய்யப் போகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்பதை அறிந்து கொள்ளக் காத்திருக்கிறது தமிழகம்!"
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT