Published : 19 May 2020 08:51 AM
Last Updated : 19 May 2020 08:51 AM

போராட்டத்தில் ஈடுபட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் சேலத்தில் கைது

சேலத்தில் கட்டுமானப்பணிகள், வெள்ளிக்கொலுசு தொழில் உள்ளிட்ட சிறு தொழில்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கால் வேலைவாய்ப்பு முடங்கிப்போனதால் தங்களது சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு ரெட்டிப்பட்டி பகுதியில் வசித்து வரும் வடமாநிலத்தவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திரளாக வந்தனர். ஊரடங்கை மீறி சமூக இடைவெளி இன்றி கூட்டமாக வந்ததால் போலீஸார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி திருப்பி அனுப்ப முயற்சித்தனர். பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளாத வட மாநிலத் தொழிலாளர்கள் தடையை மீறி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி ஓட்டமெடுத்த தொழிலாளர்கள். படங்கள்: எஸ்.குரு பிரசாத்

சேலம்/ஈரோடு

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட வட மாநிலத் தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி, வேலை பார்த்து வருகின்றனர். சேலம் மாநகர பகுதியில் உத்தரப்பிரதேசம், பிஹார், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவர்கள் டீக்கடைகள், வெள்ளிப்பட்டறை, கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் சேலத்தில் பெரிய புதூர், சின்ன புதூர், சிவதாபுரம், இரும்பாலை, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். ஊரடங்கு காரணமாக, வேலைவாய்ப்பின்றி, வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். எனவே, சொந்த ஊருக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மூலம் வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்கக் கோரி ஏற்கெனவே மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்ட வடமாநிலத்தவர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் எச்சரித்தனர். மீறி வட மாநிலத் தொழிலாளர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார், அவர்களை சமாதானம் செய்து, 4 நாட்களுக்குள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக கூறினர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது. இதனால், போலீஸார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து, போலீஸாரின் பிடியில் சிக்காமல் இருக்க தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். போலீஸார், அவர்களை விரட்டிப் பிடித்து, கைது செய்தனர்.

ஈரோட்டில் போராட்டம்

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் 200-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள், பூங்கா சாலை பகுதியில் ஒன்று கூடி தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள் ஊர் திரும்ப நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x