Published : 18 May 2020 05:06 PM
Last Updated : 18 May 2020 05:06 PM
கர்நாடக மாநிலம் மைசூரு நகரிலிருந்து பேருந்து மூலமாக அமைத்துவரப்பட்ட 63 மைசூர் வாழ் தமிழர்களும் ஓசூர் அருகே இறக்கி விடப்பட்டுள்ளனர். இந்தத் தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவரும் மீட்கப்பட்டு அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்து மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஓசூர் வட்டாட்சியர் வெங்கடேசன் கூறியதாவது:
கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டத்தில் வசிக்கும் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உட்பட 63 தமிழர்களுக்கு அம்மாநில அரசு தமிழகம் செல்ல அனுமதி வழங்கி பேருந்து மூலமாக அழைத்து வந்துள்ளனர். பெங்களூரு வழியாக தமிழக எல்லைக்கு வந்த அவர்களை குறித்து தமிழக ஓசூர் எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் தகவல் தெரிவிக்காமல் ஓசூர் கொத்தகொண்டப்பள்ளி அருகே காலை 6 மணியளவில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த 63 பேரும் தமிழகத்தில் உள்ள தங்களடைய சொந்த ஊர்களுக்கு செல்ல வழி தெரியாமல் திண்டாடியுள்ளனர். காலை வேளையில் அவ்வழியாக நடைபயிற்சிக்கு சென்றவர்கள் சாலையோரத்தில் குழந்தைகளுடன் கூட்டமாக அமர்ந்திருந்தவர்களை பார்த்து, உடனடியாக வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின்படி ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்படி அப்பகுதி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உதவியுடன் 63மைசூரு தமிழர்களும் மீட்கப்பட்டனர். அனைவரும் தனி வாகனத்தில் அழைத்து வரப்பட்டு ஜுஜுவாடி அரசுப்பள்ளியில் இயங்கி வரும் சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
அனைவருக்கும் உணவு மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது. பின்பு அனைவரும் இரண்டு அரசு பேருந்துகளில் தமிழகத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு ஓசூர் வட்டாட்சியர் வெங்கடேசன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT