Published : 18 May 2020 03:57 PM
Last Updated : 18 May 2020 03:57 PM
கரோனா பாதிப்பினால் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து சிகிச்சையில் குணமடைந்த காவல் உதவி ஆய்வாளர் இன்று பணிக்கு திரும்பிய நிலையில் அவரது பணியிடத்திற்கே நேரில் சென்று காவல் ஆணையர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
சென்னை பெருநகர காவல், பி-2 எஸ்பிளனேடு காவல் நிலைய சுற்று காவல் வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் திரு.ச.அருணாச்சலம் (நவீன காவல் கட்டுப்பாட்டு அறை) சென்னை பெருநகர காவலில் முதன் முதலில் கடந்த ஏப் 18 அன்று கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஏப் 27 உதவி ஆய்வாளர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த எஸ்பிளனேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருணாச்சலம் மருத்துவர்களின் ஆலோசனைப்படி இன்று (18.05.2020) பணிக்கு திரும்பினார். பணிக்கு திரும்பிய உதவி ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைமையிட கூடுதல் ஆணையாளர் ஜெயராம், வடக்கு மண்டல இணை ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் பேசிய உதவி ஆய்வாளர்,
“ எனக்கு நோய்த்தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்தபோது பாஸிட்டிவ் வந்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். நான் குணமடைந்ததற்கு மிக முக்கிய காரணம் காவல் துறை உயரதிகாரிகள் முதல் என்னுடன் பணியாற்றும் காவலர்கள் வரை என அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தது தான்.
14 நாட்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்னர் என் மீது மட்டுமில்லாமல் என் குடும்பத்தினர் குறித்தும் காவல்துறை அதிகாரிகள் கேட்டறிந்து உதவிகள் செய்தது மகிழ்ச்சியளித்தது. 28 நாள் முழுமையான சிகிச்சைக்குபின் 3 முறை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததால் தற்போது பணியில் சேர்ந்துள்ளேன்.
முழுமையான சமூக விலகல் அரசு சொல்லும் விதிகளை சரியாக கடைபிடித்தால் கரோனா தொற்று ஏற்படாது. அப்படி வந்தாலும் பயப்படக்கூடாது, மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்கிறார்கள், அவர்கள் தக்க வழி காட்டுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“சென்னையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து பணியில் சேரும் உதவி ஆய்வாளருக்கு காவல் துறை சார்பில் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மற்ற காவலர்களும் நலமுடன் வீடு திரும்பி மக்கள் பணிக்கு வரவேண்டும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
கரோனா பாதித்த காவலர்கள் மீது உடனடியாக அக்கறை செலுத்திய தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், டிஜிபி, மருத்துவர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்".
எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT