Published : 18 May 2020 02:52 PM
Last Updated : 18 May 2020 02:52 PM

கரோனா தொற்று முடியாத நேரத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு; விபரீதத்தில் முடியும்: டிடிவி தினகரன் எச்சரிக்கை

பேரிடர் காலத்தில் கரோனா தொற்று முடிவடையாத நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களை பாதிக்கும் வகையில் பொதுத்தேர்வு நடத்துவது விபரீதத்தில் முடியும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிக்கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் அனைத்தும் திறக்கப்படவில்லை. சிபிஎஸ்சிக்கான பொதுத்தேர்வு ஜூலையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு அதற்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு முடியாத நிலையில், பொதுப்போக்குவரத்து தொடங்காத நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ் டூ எஞ்சிய ஒரு நாள் தேர்வுத்தேதியை அமைச்சர் அறிவித்தார். இதற்கு பெற்றோர், கல்வியாளர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மாணவர்களின் மன நலன், உடல் நலன் குறித்த புரிதல் இன்றி தன்னிச்சையாக இப்படி அறிவிப்பதா என்ற விமர்சனம் எழுந்தது.

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் கண்டித்துள்ளார்.


அவரது ட்விட்டர் பதிவு:


“லட்சக்கணக்கான மாணவச்செல்வங்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு தள்ளி வைக்க வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று ஆபத்து இன்னும் குறையாததால், 12 மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படவில்லை. இச்சூழலில் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தேவையற்ற விபரீதத்தில் முடிந்துவிடும் என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x