

தமிழ்நாட்டிலிருந்து பயிற்சிக்காகவும், வேலைக்காகவும் இன்னபிற காரணங்களுக்காகவும் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருந்த தமிழர்கள் சுமார் 3,000 பேர் திடீர்ப் பொது முடக்கம் காரணமாக அங்கேயே சிக்கிக்கொண்டனர். வேலை, வருமானம் அனைத்தையும் இழந்து உணவுக்கே வழியின்றித் தவித்த அவர்களுக்கு, கடந்த 55 நாட்களாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மகாராஷ்டிர மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் உதவியுடன் உணவு வழங்கி வந்தன.
இது போன்று இந்தியாவின் பல இடங்களில் சிக்கித் தவித்த மக்கள் தங்கள் மாநிலங்களுக்குச் செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று, கடந்த மாதம் 29-ம் தேதி மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது. ஆனாலும் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும் என்று கருதி மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வருபவர்களுக்குச் சிறப்பு ரயில் இயக்க அனுமதி தராமல் தமிழக அரசு தாமதப்படுத்தி வந்தது.
மகாராஷ்டிர மாநில தொழில் வளர்ச்சிக் கழகத் தலைவராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் அன்பழகன் ஐஏஎஸ், மராட்டிய மாநில நிலஅளவைத் துறை ஐஜியாகப் பணியாற்றும் எஸ்.சொக்கலிங்கம் ஐஏஎஸ் ஆகியோர், ‘லெமுரியா அறக்கட்டளை’ நிறுவனர் சு.குமணராசன், ‘விழித்தெழு இயக்கம்’ ஸ்ரீதர், புனே சேகர் போன்ற தமிழர் தன்னார்வர்வ குழுவினருடன் சேர்ந்து அவர்களைத் தமிழகம் அனுப்புவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டினார்கள். இந்தப் பிரச்சினை குறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தது.
இப்படி வெவ்வேறு முனைகளில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக, சிறப்பு ரயில் இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இதற்கான கடிதத்தை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், மகாராஷ்டிரத் தலைமை செயலாளர் அஜய் மேத்தாவுக்கு கடந்த 15-ம் தேதி அனுப்பி வைத்தார். இதனால் இன்று (திங்கட்கிழமை) காலை புனே நகரிலிருந்து தமிழ்நாட்டுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. நாசிக், புனே, தவுண்ட், சோலாப்பூர், ரத்தினகிரி, சத்தாரா போன்ற பகுதிகளில் இருந்து மராட்டிய மாநிலத் தொழில் வளர்ச்சிக் கழக அதிகாரிகள் துணையுடன் பேருந்துகளில் ஏற்றிவரப்பட்ட 1,450 தொழிலாளர்களும், புனே ரயில் நிலையத்தில் இருந்து இந்த ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்களுக்குத் தேவையான உணவும் வழங்கப்பட்டது. தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப முயற்சி மேற்கொண்ட அதிகாரிகள், தன்னார்வலர்கள், பத்திரிகையாளர்கள் என்று அனைவருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த சிறப்பு ரயில் நாளை (செவ்வாய்) காலை 6 மணியளவில் விழுப்புரம் வந்தடையும். இறுதி நிறுத்தமான திருநெல்வேலிக்கு மாலை 3 மணியளவில் வந்தடையும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் அனைவரும் அவர்கள் வந்து சேரும் மாவட்டப் பகுதிகளில் முறையான மருத்துவப் சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டே அனுமதிக்கப்படுவர் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ரயில் மூன்று நிலையங்களில் மட்டுமே நிற்கும் என்றாலும், அதில் சுமார் 12 மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் பயணிகள் தமிழக அரசுக்குக் கண்ணீருடன் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.