Published : 18 May 2020 10:07 AM
Last Updated : 18 May 2020 10:07 AM
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளால், நாட்டின் பொருளாதாரம் வருங்காலத்தில் மேம்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மே 18) வெளியிட்ட அறிக்கை:
"இந்தியா முழுவதும் கரோனாவால் அமலில் உள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க நேற்றைய தினம் மத்திய நிதி அமைச்சர் வெளியிட்ட 5 ஆம் கட்ட அறிவிப்புகளிலும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
குறிப்பாக, நிலம், பணப்புழக்கம், தொழிலாளர் நலன், கல்வி, மருத்துவம், 100 நாள் வேலைவாய்ப்பு, பொதுத்துறை சார்ந்த 7 அறிவிப்புகளில் உள்ள முதலீடும், திட்டங்களும் பயன் தரும்.
அதாவது, கல்வித்துறைக்கு புதிதாக 12 சேனல்கள் உருவாக்கப்படும், டிடிஹெச் மூலம் கல்வி தொடர்பாக நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 4 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படும், ஆன்லைன் கல்விக்காக இ-வித்யா திட்டம் அமல்படுத்தப்படும், மாற்றுத்திறனாளிகளுக்கு மின் பாடங்கள் உருவாக்கப்படும் போன்ற அறிவிப்புகள் தொழில்நுட்பத்தோடு செயல்பாட்டுக்கு வருவது மாணவ, மாணவிகளின் கல்விக்கு பேருதவியாக இருக்கும்.
மேலும், 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுவதும், சிறு, குறு தொழில் துறைக்கான சிறப்பு திவால் சட்டம் உருவாக்கப்படுவதும், தொழில் செய்ய ஏதுவாக தொழில் துறைக்கான விதிமுறைகள் எளிமையாக்கப்படுவதும், பொதுத்துறை நிறுவனக் கொள்கையில் காலத்துக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படுவதும், தொழில்கள், தொழிலாளர்கள், நிறுவனங்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைய வழிவகுக்கும்.
உத்தி சார்ந்த துறை தவிர மற்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் தனியார் பங்கு பெற அனுமதிக்க இருப்பது சூழலுக்கு ஏற்ப எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.
மாநில அரசுகளுக்கான கடன் வரம்பு 3% ஆக இருந்த நிலையில் 5% ஆக உயர்வதற்கு அறிவிப்பு வெளியாகியிருப்பதால் அனைத்து மாநில அரசுகளும் கூடுதல் கடன் பெறும்போது மக்கள் பயனடைவார்கள்.
மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதன் மூலம் வருவாய் பங்கீட்டில் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் சமாளிக்கப்பட்டு, மாநில அரசுகள் மக்களுக்கு உதவிடுவதற்கு ஏதுவாக இருக்கும்.
எனவே, சுயசார்பு இந்தியா திட்டத்திற்கான பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களில் 5 ஆம் கட்டமாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்புகளால் வருங்கால இந்தியா பொருளாதாரத்தில் மேம்படும் என்ற நம்பிக்கையை அளித்திருக்கிறது என்று தமாகா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்"
என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...