Published : 29 Mar 2014 03:21 PM
Last Updated : 29 Mar 2014 03:21 PM
தென்னக நதிகள் இணைப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அளவிலான தேர்தல் அறிக்கையும், தமிழக அளவிலான தேர்தல் அறிக்கையும் சென்னையில் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.
கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தேசியச் செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, திருவள்ளூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.எஸ்.கண்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.
தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்:
* மகாநதி தொடங்கி கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, கங்கை வரை தென்னக நதிகள இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
* குடிநீர் மற்றும் பாசனத்துக்கான நீர் தட்டுப்பாட்டை போக்க பிரம்மபுத்திரா உள்ளிட்ட வட இந்திய நதிகள் இணைக்கப்படும்.
* இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண தேவையான முயற்சிகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
* தென்தமிழகத்தில் இருந்து யுரேனியம், கார்னைட் உள்ளிட்ட கனிமங்கள் தனியாரால் கடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
* எரிவாயு, கனிமங்கள் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள்தான் கையாள வேண்டும்.
* வசிக்கும் இடங்களிலும் பணிபுரியும் இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்.
* கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருப்பதை போல தமிழ்நாட்டிலும் லோக் ஆயுக்தா ஏற்படுத்ததப்படும்.
* வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய சிறு - குறுந்தொழில்கள் பாதுகாக்கப்படும்.
* தொழிற்சாலை கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் தவிர்க்க புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மறுசுழற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
* ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு உறுதிசெய்யப்படும்.
* கேரளாவைப் போல் தமிழ்நாட்டிலும் மாநில அரசு பணிக்கான வயது வரம்பு 45 ஆக உயர்த்தப்பட வேண்டும்.
* கோவில் நிலத்தில் தொடர்ந்து பல காலமாக குடியிருந்து வரும் மக்கள் வெளியேற்றப்படாத வகையில் குடியிருப்பு உரிமை உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
* சொந்த வீட்டு மனை இல்லாத, சொந்த வீடு இல்லாத மக்களுக்கு ஓராண்டுக்குள் முதல்கட்டமாக வீட்டு மனை வழங்கப்பட வேண்டும்.
* கோவில் நிலம் மற்றும் இடவாடகையை மறுசீரமைப்பு செய்து நியாயமான வாடகை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
மேற்சொன்ன கோரிக்கைகளை, திட்டங்களை நிறைவேற்றக்கூடிய அரசு அமைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும். இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT