Published : 17 May 2020 08:47 PM
Last Updated : 17 May 2020 08:47 PM
நிதிப் பிரச்சினை அதிகரித்து வருவதால் மதுக்கடைகள், கேபிள் டிவியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று ஆளுங்கட்சி எம்எல்ஏ தொடங்கி அரசு ஊழியர்கள் வரை வலியுறுத்தல்கள் நீண்டுள்ளன.
கரோனா பாதிப்பாலும், தடுப்பு நடவடிக்கையாலும் புதுவை மாநில நிதி நிலை, அரசின் வருவாய், பொருளாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர்கள் நாள்தோறும் பேசி வருகிறார்கள். இந்த மாதம் முதல் நிதியாண்டு முடியும் வரை அரசு ஊழியர்களுக்குச் சம்பளம், முதியோருக்கு ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க முடியாத நிதி நெருக்கடி உள்ளது.
இச்சூழலில் புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளர் லட்சுமி நாராயணன் எம்எல்ஏ, முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
''எந்தவொரு மக்கள் நலத்திட்டத்தையும் செயல்படுத்த முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் மீது மக்களிடையே அதிருப்தியும், கொந்தளிப்பும் ஏற்படும். இதனைத் தவிர்க்க எந்தவொரு ஆலோசனையோ, கவலையோ அமைச்சரவைக்கும், ஆளுநர், தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள் உள்ளன. அதன் மூலம் அரசுக்கு ரூ. 1,000 கோடி கலால் வரியாக வருகிறது. விற்று முதல் (டர்ன் ஓவர்) ரூ. 5000 கோடி. இதில் குறைந்தபட்சம் 20 சதவீத லாபம் என்றாலே ரூ.1,000 கோடி அரசுக்கு லாபம் வரும். மதுபானக்கடைகளை அரசே ஏற்று நடத்தினார் கலால் வரி மூலம் ரூ. 1,000 கோடியும், மொத்த வியாபாரத்தையும் அரசே நடத்தினால் அதன் மூலம் மேலும் ரூ. 1,000 கோடியும் அரசுக்கு ரூ. 2 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். இது நிதிப் பிரச்சினையை முற்றிலும் தீர்க்கும்.
ரேஷன் அட்டைகள் அடிப்படையில் புதுச்சேரியில் 3.5 லட்சம் குடும்பங்கள் உள்ளன. அதன்படி கேபிள் டிவியை அரசே ஏற்று நடத்தினால் மாதம் ரூ. 1.5 கோடி வருவாய் கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.18 கோடி வருவாய் கிடைக்கும்.
கல்வி நிறுவன சொத்துகளுக்கு புதுச்சேரியில் வரி விதிப்பதில்லை. சாதாரண மக்கள் வசிக்கும் இடங்களுக்கு வரி விதிப்பது போல், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை அளவீடு செய்து சொத்து வரி விதித்தால் ஆண்டுக்கு ரூ.100 கோடி வருவாய் கிடைக்கும். இதுதொடர்பாக முதல்வர், அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்''.
இவ்வாறு லட்சுமி நாராயணன் எம்எல்ஏ கூறியுள்ளார்.
கிரண்பேடிக்கு ஆண்டுக்கு ரூ. 7 கோடி செலவு; குறைக்கக் கோரும் அரசு ஊழியர் சம்மேளனம்
அதேபோல் நிதி விவகாரம் தொடர்பாக அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
''மாநிலத்தின் முதல் குடிமகனாக உள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஆண்டுக்கு ஏழு கோடிக்கு மேலான அரசின் நிதியிலிருந்து, செலவிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் மக்கள் பிரதிநிதிகளான, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் மட்டுமல்லாமல், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளின் செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தனியார் கேபிள் டிவியை அரசே ஏற்று நடத்துமேயானால், எவ்வித வரிஏய்ப்பும் இல்லாமல், தேவையான நிதியை உருவாக்க முடியும். புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடைகளை அரசே ஏற்று நடத்தவேண்டும்
மதுபானம் உற்பத்தி செய்யும் தனியார் மதுபான ஆலைகளை ஒன்றிணைத்து, தமிழகத்தைப் போல் அரசு கார்ப்பரேஷன் ஒன்றை உருவாக்கினால், போலிகள் மற்றும் வரி ஏய்ப்புகள் தடுக்கப்பட்டு, அரசுக்குத் தேவையான நிதியை, வரிகள் மூலம் உருவாக்க முடியும். அவ்வாறு முடியாத பட்சத்தில், கலால் வரியை உயர்த்துவதோடு, கள், சாராயக் கடைகளை ஏலம் விடுவது போல், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மதுபானக் கடைகளை ஏலம் விடவேண்டும்.
மத்திய அரசின் நிலையை, புதுச்சேரி அரசும் பின்பற்றியே, ஊழியர்கள் ஊதியத்தைத் தியாகம் செய்யவேண்டும் என்கிற முதல்வரின் வேண்டுகோளை , அரசு ஊழியர் சம்மேளனம் ஒருபோதும் ஏற்காது''.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர்கள் பலரும் இக்கருத்தை வலியுறுத்தினாலும், மதுக்கடைகளையும், கேபிள் டிவியையும் பல கட்சியினர் நடத்துவதால் அரசுக்கு வருவாய் வர வாய்ப்பிருந்தாலும் இது நடைமுறைக்கு வருமா என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT