Last Updated : 17 May, 2020 04:54 PM

1  

Published : 17 May 2020 04:54 PM
Last Updated : 17 May 2020 04:54 PM

மத்திய பட்ஜெட்டின் எதிரொலி தான்- பிரதமர், நிதியமைச்சரின் அறிவிப்பு; புதிய அம்சங்கள் எதுவும் இல்லை: முதல்வர் நாராயணசாமி  

புதுச்சேரி

மத்திய அரசு பட்ஜெட்டின் எதிரொலி தான் பிரதமர், நிதியமைச்சரின் அறிவிப்பே தவிர புதிய அம்சங்கள் எதுவும் இல்லை என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று(மே 17) செய்தியாளர்களிடம் கூறியதாவது,‘‘இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளயிட்ட அறிவிப்புகளில் இரண்டு முக்கிய அம்சங்களை நான் பாராட்டுகிறேன். ஒன்று ரூ.40 ஆயிரம் கோடி மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாயப்பு திட்டத்துக்கு அறிவித்துள்ளது. மற்றொன்று ரிசர்வ் வங்கியில் கடன் வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தி கொடுத்திருப்பது.

கரோனா சமயத்தில் நிதிப் பற்றாக்குறையால் மாநிலங்கள் தவிக்கின்ற இத்தருணத்தில் கடன் வரம்பை உயர்த்தி கொடுத்திருப்பது மாநிலங்களுக்கு பயனுடையதாக இருக்கும். கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்துக்கு நிதி அறிவித்திருப்பது ஏழை மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படும்.

மேலும் பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் என்னென்ன துறைக்கு செலவிடப் போகிறோம் என்பதை குறிப்பிட்டுள்ளனர். விவசாயிகள், மின்சாரத்துறை, புலம்பெயர்ந்த தொழிலாளர், போக்குவரத்து, விமான சேவை, விண்வெளி ஆராய்ச்சி, அணு ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கியிருப்பதாக அறிவித்துள்ளார்.

குறிப்பாக, நிலக்கரி சுரங்கங்கள், மின்சார விநியாகம், 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்குவது போன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நிதியமைச்சரின் அறிவிப்புகள் எல்லாவற்றையும் தனியார் மயமாக்குகின்ற ஒரு அறிவிப்பாகத்தான் உள்ளது.

2020-21 மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் ரூ.30 லட்சம் கோடி நாட்டின் வளர்ச்சிக்காக முழுமையாக செலவு செய்வோம் என்று கூறினார். அதில் ஒரு பகுதியாகத்தான் பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி பல துறைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் எதிரொலி தான் பிரதமர், நிதியமைச்சரின் அறிவிப்பே தவிர இதில் புதிய அம்சங்கள் எதுவும் இல்லை.

மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் சம்பந்தமாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பல அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்தைக் கேட்டு கரோனா சமயத்தில் எப்படி அதனை சரி செய்ய முடியும் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்த இருக்கிறோம். பல துறைகளில் ஊதியம் போடாத நிலையில் அவர்களுக்கு இச்சமயத்தில் எவ்வாறு உதவி செய்வது என்பதும் தொடர்பாகவும் பேசவுள்ளோம்.

இப்போது பஞ்சாப் மாநில முதல்வர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதேபோல், தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத்தில் சில தளர்வுகளடன் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நடைமுறைப்படுத்தி உள்ளனர். நாளைய தினம் புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

அதில் ஊரடங்கை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று பேசி முடிவு செய்து அறிவிப்போம். மேலும், மதுகடைகள் சம்பந்தமாக கலந்து பேசுவோம்.

குறிப்பாக, பொருளாதார நடவடிக்கைகளில் எந்த அளவுக்கு தளர்வு கொண்டு வருவது என்றும் பேசுவோம்.

நம்முடைய மாநிலத்தின் நிதி சம்பந்தமாக தொடர்ந்து பல அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். நிதி ஆதாரத்தை எப்படி பெருக்குவது. ஏற்கனவே மெட்ராஸ் ஸ்கூல் அப் எக்கனாமிக்ஸ் என்ற அமைப்பு மூலமாக மத்திய அரசானது மாநிலங்களுக்கு 41 சதவீதம் நிதி கொடுக்கிறது. புதுச்சேரியின் வருவாய் என்ன? நாம் மத்திய அரசுக்கு எவ்வளவு நிதி கொடுகிறோம்.

மத்திய அரசிடமிருந்து எவ்வளவு நிதி நமக்கு முறையாக கிடைக்க வேண்டும் என ஒரு ஆய்வு செய்தோம். அந்த ஆய்வு அறிக்கை நமக்கு வந்துள்ளது. நம்முடைய நிதி ஆதாரத்தை வைத்து மத்திய அரசு நமக்கு 41 சதவீத நிதியை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளேன்.

அதே அமைப்பை வைத்து புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, வருமானத்தை அதிகரிப்பது சம்பந்தமாக அவர்களிடம் ஒரு மாத காலத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், அவர்கள் அனைத்து துறைகளை கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

அவர்களும் எல்லா துறைகளையும் கலந்தாலோசித்து பரிந்துரையை வழங்குவதாக கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் மாநில வருவாயை பெருக்குவதற்கு அவர்கள் கொடுக்கின்ற வழிமுறைகளை கலந்து பேசி அடுத்த பட்ஜெட்டில் அவைகளை சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்போம்’’இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x