Published : 17 May 2020 11:38 AM
Last Updated : 17 May 2020 11:38 AM
அவிநாசி அருகே ஆட்டுக்குட்டி தோட்டத்துக்குள் புகுந்த விவகாரம்: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸார் கூறியதாவது:
அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி தேவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(25). இவரது ஆடு கடந்த 7-ம் தேதி, வீட்டுக்கு அருகில் உள்ள மூர்த்தி என்பவரது தோட்டத்துக்குள் சென்றுள்ளது. இதையறிந்த லோகநாதன் ஆட்டுக்குட்டியை மீட்பதற்காக, தனது தந்தையுடன் சென்றுள்ளார்.
அப்போது அவரது ஆட்டுக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்தார். மேலும் தோட்டத்து உரிமையாளரிடம் ஆட்டுக்குட்டியை தரும்படி கேட்டுள்ளார். அப்போது தோட்டத்து உரிமையாளரான மூர்த்தி மகன் பிரவீன் மற்றும் குடும்பத்தினர், லோகாநாதனை ஜாதி பெயர் சொல்லி, தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக லோகநாதன் அவிநாசி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பிரவீன் உட்பட குடும்பத்தினர் 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில் எதிர் தரப்பை சேர்ந்த பிரவீன் மற்றும் லோகநாதனின் வீட்டு உரிமையாளர் காளிமுத்து ஆகியோர் அளித்த புகாரின் பேரில், அவிநாசி காவல் நிலையத்தில் லோகநாதன் மீது, இரு வேறு வழக்குகள் பதியப்பட்டன.
இது தொடர்பாக சாதி ஒழிப்புக் கூட்டமைப்பினர் கூறியதாவது:
பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சொந்த கிராமத்தில் தொடர்ந்து வாழ போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும். காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மூலமாக, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தொகுதியான அவிநாசி பகுதியில், தொடர்ந்து தீண்டாமை வன்கொடுமைகள் அதிகரித்து வருவதும், இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மாவட்ட நிர்வாகத்துக்கும் போலீஸாருக்கும் நல்ல போக்கு அல்ல என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம் என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT