Published : 17 May 2020 07:04 AM
Last Updated : 17 May 2020 07:04 AM
அரியலூர்/ காரைக்கால்/ கள்ளக்குறிச்சி
கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அரியலூர், காரைக்கால் மாவட்டங்களில் வேலையிழந்து தவித்துவந்த வடமாநில தொழிலாளர்கள் 685 பேர் நேற்று சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் புறப்பட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். தற்போது ஊரடங்கு காரணமாக இவர்கள் வேலை இழந்து வருமானமின்றித் தவிப்பதால் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தனர்.
அதன்படி, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 330 தொழிலாளர் களை சிறப்பு ரயிலில் சொந்த ஊர்களுக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்காக அவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் ரயில் டிக்கெட்டுகள் வாங்கப்பட்டன.
பின்னர், அவர்கள் மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து 14 வாகனங்கள் மூலம் அரியலூர் ரயில் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் நேற்று இரவு சிறப்பு ரயில் மூலம் பிஹாருக்கு புறப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் த.ரத்னா, எஸ்பி வீ.ஆர்.னிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் உணவு வழங்கி அவர்களை அனுப்பி வைத்தனர்.
காரைக்காலில் இருந்து...
இதேபோல, காரைக்கால் மாவட்டத்தில் பணிபுரிந்த 355 வடமாநில தொழிலாளர்கள் நேற்று மாலை 6 மணியளவில் சிறப்பு ரயிலில் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். காரைக்கால் ரயில் நிலையத்தில் புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா ஆகியோர் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
இந்த ரயில், புதுச்சேரி, சென்னை, பிஹார் வழியாக உத்தரப்பிரதேசம் செல்கிறது. தொழிலாளர்களுக்கான ரயில் கட்டண செலவை மாநில அரசே ஏற்றுக் கொண்டது.
200 தொழிலாளர்கள் வந்தனர்
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கள்ளக்குறிச்சி மாவட் டம் ரிஷிவந்தியம் தொகுதிக் குட்பட்ட திருவரங்கம், அரும்பராம் பட்டு, மூங்கில்துறைப்பட்டு, சுத்தமலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 200 பேர் கூலித் தொழிலாளர் களாக வேலை செய்து வந்தனர். ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த அவர்களின் பயணச் செலவை எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஏற்றுக்கொண்டார். 4 பேருந்து களில் அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் நேற்று முன்தினம் இரவு மூங்கில்துறைப் பட்டு வந்தடைந்தனர். மருத்துவ பரிசோதனைக்குப் பின் அவர் கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT