Published : 17 May 2020 07:01 AM
Last Updated : 17 May 2020 07:01 AM
டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை காவல் எல்லை பகுதி, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர தமிழகம் முழுவதும் 3500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன.
காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர், வேலூர்மாவட்டம் குடியாத்தம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலை 7 மணி முதலே மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்க குவிந்தனர். அவர்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர். ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காலை 9 மணி முதல் மதுபானங்களை வாங்க டோக்கன் வழங்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு 70 பேர் என்கிற ரீதியில் மதுக்கடைகள் முன்பு அமைக்கப்பட்ட வரிசையில் நிற்க வைத்து மதுபானங்கள் வாங்க அனுமதிக்கப்பட்டனர். ஒரு வாரத்துக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் ஒரு சிலர் 3 நாட்களுக்கு தேவையான மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர்.
சேலம், திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் கடைகளுக்கு அருகில் உள்ள மைதானம், சாலை உள்ளிட்டவற்றில் 1 மீட்டர் இடைவெளியில் வட்டங்கள் வரையப்பட்டு மதுப்பிரியர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 பேருக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்பட்டதால் பெரும்பாலான கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக நேற்றுபிற்பகல் 3 மணிக்குள் விற்பனை நிறைவடைந்தது.
மதுபானம் கிடைக்காதவர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். நீண்ட நேரம் காத்திருந்த மதுபிரியர்களுக்கு மறுநாளுக்கான டோக்கனில் நேரம் குறிப்பிட்டு வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாளில் சுமார் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக டாஸ்மாக் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT