Published : 16 May 2020 06:55 PM
Last Updated : 16 May 2020 06:55 PM
நகைச்சுவை நடிகர் போண்டாமணி இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் தனக்கான இடத்தைப் பிடித்திருப்பவர். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான போண்டாமணி மேடைக் கலைஞரும் கூட!
கோயில் திருவிழாக்கள் தொடங்கி அதிமுக மேடை வரை பரிணமிக்கும் போண்டா மணியிடம் இந்தப் பொதுமுடக்கக் காலத்தில் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன்.
“எல்லாரையும் போலத்தாண்ணே என்னையும் வீட்டோட கரோனா முடக்கி வைச்சுடுச்சு. ஆனால், இதுலயும் ஒரு நல்ல விஷயம் நடந்துருக்கு. ஷூட்டிங் இருந்தா ஏதாச்சும் ஒரு ஊர்ல பொழுது கழியும். அதே மாதிரி கோயில் திருவிழா தொடங்கி, பொது நிகழ்ச்சிகள் வரைக்கும் மேடைக் கலைஞனா ஊர் ஊரா சுத்துவேன். எனக்கு வேலை இல்லாம வீட்டில் இருக்கும்போது பிள்ளைங்க ஸ்கூல் போயிடுவாங்க. அவுங்களுக்கு ஸ்கூல் இல்லாத நாட்கள்ல பெரும்பாலும் எனக்கு ஷூட்டிங் இருக்கும். இப்போ மொத்தக் குடும்பத்தோடயும் பேசுறதுக்கு பொதுமுடக்கத்தால் நேரம் கிடைச்சுருக்கு. வீட்ல மனைவி சமைக்கிறப்ப நானும்கூட நின்னு உதவிசெய்றேன். இந்த வாழ்க்கை ரொம்ப சுகமா இருக்குண்ணே. அதேநேரம் வாழ்க்கையில் சம்பாதிக்கிறதும் முக்கியம்ணே. சில நிபந்தனைகளோட ஷூட்டிங் நடத்துறதுக்கும் அனுமதி கொடுக்கணும்னு முதல்வருக்கு மனு கொடுத்துருக்கோம்.
வீட்ல இருந்தாலும் என்னால முடிஞ்ச வரைக்கும் மக்களுக்குக் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திட்டுத்தான் இருக்கேன். காலையில் எங்க காம்பவுண்டுக்கு காய்கனி வரும்போது, வீட்டை விட்டு வெளியே போயிடுவேன். ‘எல்லாரும் மாஸ்க் போடுங்க, தனிமனித இடைவெளி விட்டு நின்னு வாங்குங்க’ன்னு சொல்வேன். மத்திய அரசே கரோனாவோட வாழப் பழகுங்கன்னு சொல்லியிருக்குண்ணே... இனி, நம்மதானே விழிப்புணர்வோட இருக்கணும். அதுக்காகத்தான் இப்படிச் செய்யுறேன்.
செய்தித்துறை எடுத்த கரோனா விழிப்புணர்வு பாடலிலும் நடிச்சுருக்கேன். நிறைய ஊர்களில் உள்ளூர் சேனலில் கரோனா விழிப்புணர்வு வீடியோ பேசித் தரணும்னு கேட்குறாங்க. செல்போன் மூலமாவே அதையும் அனுப்பி வைச்சுட்டு இருக்கேன்.
என்னைப் பொறுத்தவரை, குடும்பத்தோட அதிக நேரத்தை செலவுசெய்ய கரோனா ஒரு வாய்ப்பு கொடுத்துருக்கு. வாழப் பழகுறதோட அதில் இருந்து மீளப் பழகுறதும் இப்போ மக்களுக்கு ரொம்ப முக்கியம்ணே... தனிமனித இடைவெளிதான் அதுக்கு ஒரே வழி” என்று அழகாய்ச் சொன்னார் போண்டா மணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT