Published : 16 May 2020 04:37 PM
Last Updated : 16 May 2020 04:37 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 40 பேருக்கு கரானோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் மகராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்தவர்கள். கடந்த 10 நாட்களில் கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 3 மடங்காகியிருப்பதால் மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்குமுன் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 62 ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது மகராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் திருநெல்வேலி மாவட்டத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள். அவர்களில் பலருக்கு நடத்தப்பட்ட சோதனையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதனால் நாளுக்குநாள் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று மட்டும் நாங்குநேரி வட்டாரத்தில் 32 பேர், பாப்பாக்குடியில் 3 பேர், ராதாபுரத்தில் ஒருவர், வள்ளியூரி்ல் 2 பேர், மானூரில் ஒருவர், திருநெல்வேலி மாநகரில் ஒருவர் என்று மொத்தம் 40 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் நேற்று வரையில் 136 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மகாராஷ்டிராவில் வசித்து வந்தனர். தற்போது அங்கு கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் பெரும்பாலானோர் தடுத்து நிறுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனை முடிவுகள் வருமுன்னரே பலரை சொந்த ஊர்களுக்கு அனுப்பி விடுகிறார்கள்.
பரிசோதனை முடிவில் நோய் பாதிப்பு உறுதியானால் சம்பந்தப்பட்டவர்களை கிராமங்களுக்கு தேடிச்சென்று ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவருகிறார்கள். அதன்பின்னரே அப்பகுதியை முடக்கும் நிலையுள்ளது. ஆனால் அதற்குள்ளாகவே அந்த நபர்களால் பலருக்கு நோய் பரவல் ஏற்படும் அபாயம் மாவட்டத்தில் நீடிப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்துள்ளன. பரிசோதனை முடிவுகள் வரும்வரையில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தி வைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்புவரை கிராமங்களில் நோய் பாதிப்பு கண்டறியப்படாமல் இருந்த நிலையில் தற்போது கிராமங்களிலும் கரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டு வருவதும் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து வருவதும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT