Published : 16 May 2020 04:00 PM
Last Updated : 16 May 2020 04:00 PM
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களும் ஊழியர்களும் அரசு உத்தரவுப்படி மே 18-ம் தேதி (திங்கள் கிழமை) பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் கிருஷ்ண மோகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''எதிர்வரும் 18.05.2020 திங்கள்கிழமை முதல் தமிழக அரசின் உத்தரவின்படி பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகள் மற்றும் அலுவலகங்கள் ஐம்பது சதவீத ஊழியர்களுடன் இயங்க வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர்களை 3 குழுக்களாகப் பிரித்து வாரத்தில் தலா 2 நாட்கள் வீதம் பணியாற்ற வேண்டும்.
அனைத்து அலுவலகங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் வாரத்தின் 6 நாட்களும் பணியாற்ற வேண்டும். சுழற்சி முறையிலான பணியின்போது வீட்டில் இருக்கும் ஊழியர்கள் எலக்ட்ரானிக் முறையில் அலுவலகத்தில் தொடர்பில் இருக்க வேண்டும்''.
இவ்வாறு கிருஷ்ண மோகன் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலை அடுத்து, ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT