Published : 16 May 2020 03:35 PM
Last Updated : 16 May 2020 03:35 PM
தமிழ்நாட்டில் அசைவப் பிரியர்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் ஒன்று மதுரை. கல்யாணம் முதல் காரியம் வரையில் கறிக் குழம்புக்கு முன்னுரிமை கொடுக்கிற அசைவ பூமி இது.
ஊரடங்கு நேரத்திலும் ஞாயிற்றுக் கிழமைகளில் கறிக் கடைகளில் கூடிய கூட்டம் சித்திரைத் திருவிழாவை மிஞ்சும் வகையில் இருந்ததை, ஊடகங்கள் வாயிலாகப் பார்த்து தமிழகமே மிரண்டது.
இதற்கிடையே, மதுரையில் ஞாயிறுதோறும் ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி உள்பட அனைத்து இறைச்சிக் கடைகளுக்கும் தடை போட்டுவிட்டார் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய். ஆனாலும், ஆங்காங்கே கடை திறக்கப்படுவதும் உள்ளாட்சி நிர்வாகங்கள் அந்தக் கடைக்கு சீல் வைப்பதும் கள்ளன்- போலீஸ் ஆட்டம் போல தொடர்ந்தது.
எவ்வளவு கெடுபிடி காட்டினாலும் ஞாயிறுதோறும் மதுரையில் மீன் வியாபாரிகள் சுற்றுகிறார்களே எப்படி என்று யோசித்த மாவட்ட நிர்வாகம், கரிமேட்டில் இருந்து மாட்டுத்தாவணிக்கு மாற்றப்பட்ட மொத்த மீன் சந்தை சனிக்கிழமை இரவே வியாபாரத்தைத் தொடங்கி விடுவதுதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று கண்டறிந்தது. ஆக, அந்த மொத்த மார்க்கெட்டுக்கு மட்டும் சனிக்கிழமையும் தடை போட்டார்கள். கூடவே, சனிக்கிழமை எந்த ஊர்க் கண்மாயில் மீன்பிடித்தாலும், கண்மாய்க்கே போய் மீன்களைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டது மாவட்ட நிர்வாகம்.
இவ்வளவு அமளி துமளிக்கு நடுவில், நாளை (ஞாயிறு) மதுரையில் வழக்கம் போல இறைச்சிக் கடைகள் செயல்படாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து 7-வது வாரமாக கறிக்கடை இல்லாத மதுரை என்ற பெயருக்கு மதுரை மாநகர் ஆளாகியிருக்கிறது. எனினும், டாஸ்மாக் சரக்கைப் போல பதுக்கி வைத்து விற்பதால் ஆங்காங்கே கறிக்குழம்பு மணக்கத்தான் செய்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT