Published : 16 May 2020 02:58 PM
Last Updated : 16 May 2020 02:58 PM
ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தேவைக்கு நிறுவனம் பயன்படுத்தி வந்த டிஜிட்டல் கையெழுத்து முறைக்குப் பதிலாக மின்னணு கையெழுத்து வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சு.சிவசண்முகம் கூறியதாவது:
''தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யும் பணத்தை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துக்கு ஊழியர்களின் விவரம், அவர்கள் கணக்கில் செலுத்த வேண்டிய பணம் ஆகியவை அடங்கிய இசிஆர் படிவத்துடன் செலுத்துவது வழக்கம். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் தனியார் நிறுவனங்கள் இசிஆர் படிவத்தை மட்டும் தற்போது வழங்கினால் போதும். பணத்தைச் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக தனியார் நிறுவனங்கள் ஏற்கெனவே அளித்த இசிஆர் (மின்னணு விவரங்களுடன் இணைந்த சலான்) படிவத்துடன் வழங்கிய உறுதிமொழியில் தவறு இருந்தால் அதைத் திருத்தம் செய்ய தற்போது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்கள் புதிய மின்னணு விவரங்களுடன் இணைந்த இசிஆர் படிவத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவேற்றம் செய்யும் முன்பு ஏற்கெனவே பதிவேற்றம் செய்த இசிஆர் படிவத்தை நீக்கிவிட வேண்டும்.
தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அவர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் வழங்க நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற அலுவலர் டிஜிட்டல் கையெழுத்து சான்றிதழ் டாங்கிளை (டிஎஸ்சி டாங்கிள்) பயன்படுத்துவது வழக்கம். அந்த டாங்கிள் நிர்வாக வளாகத்தில் இருப்பதால் ஊரடங்கால் அதைப் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது.
எனவே அந்த நிறுவனங்கள் உடனடியாக மின்னணு கையெழுத்து (இ- சைன்) வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மின்னணு கையெழுத்துக்குத் தேவையான அனைத்து சான்றொப்ப நடவடிக்கைகளை நிறுவனத்தின் அதிகாரபூர்வ மின்னஞ்சல் வழியாக ஏற்படுத்திக்கொள்ளலாம்''.
இவ்வாறு சிவசண்முகம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT