Published : 16 May 2020 02:22 PM
Last Updated : 16 May 2020 02:22 PM
தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடைபயணமாகவோ, பிற வாகனங்களின் மூலமாகவோ செல்ல வேண்டாம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கை:
"வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அனைத்துவிதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
கடந்த 6-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை 55 ஆயிரத்து 473 வெளிமாநிலத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 43 ரயில்களில் பிஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தினந்தோறும் சுமார் 10 ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து வெளிமாநிலத் தொழிலாளர்களும் அவர் தம் விருப்பத்தின் பேரில் படிப்படியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியோடு அவர் தம் மாநிலங்களுக்குச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரயில்வே கட்டணம் உட்பட அனைத்து பயணச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடை பயணமாகவோ பிற வாகனங்களின் மூலமாகவோ செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அதுவரை, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தற்போது தங்கியிருக்கும் முகாம்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT