Published : 15 May 2020 06:02 PM
Last Updated : 15 May 2020 06:02 PM
கொல்கத்தாவில் இருந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 பேர் மருத்துவப் பரிசோதனைக்கு பயந்து தப்பியோடினர். அவர்களில் 13 பேரை போலீஸார் மீட்டனர்.
கரோனா தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு 2 மாதங்களாகத் தொடர்வதால் வெளிமாநிலங்களில் உள்ள தமிழகத் தொழிலாளர்களை மீட்டு சொந்த ஊர்களுக்கு அழைத்து வரும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் ஓட்டலில் பணிபுரிந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மணலூர் பகுதியைச் சேர்ந்த 78 தொழிலாளர்கள் 3 பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.
இதில் இரண்டு பேருந்துகள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குச் சென்ற நிலையில், மற்றொரு பேருந்தில் இருந்த 28 பேரில் 7 பேர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் சிவகங்கையில் இறக்கிவிடப்பட்டனர்.
அங்கு வந்த சுகாதாரத்துறையினர், 7 பேரையும் மருத்துவப் பரிசோதனைக்காக வேறொரு வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அதனைக் கவனித்த பேருந்தில் இருந்த மற்றவர்கள், இதேபோல் தங்களையும் மருத்துவப் பரிசோதனை செய்து 14 நாட்கள் தனிமைப்படுத்துவர் என பயந்தனர். இதனால் பேருந்தில் இருந்து தப்பிக்கத் திட்டமிட்டனர்.
இந்நிலையில் மானாமதுரை ரயில்வே கேட் அருகே பஸ் வந்தபோது, நிறுத்தச் சொல்லி குழந்தைகள் உள்பட 19 பேர் தப்பியோடினர். இதுகுறித்து பஸ் ஓட்டுநர் மானாமதுரை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். எஸ்ஐ மாரிக்கண்ணன் தலைமையிலான போலீஸார் தப்பியோடியவர்களில் 13 பேரை மீட்டனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் சிவகங்கையில் இறக்கிவிடப்பட்ட 7 பேரையும் விசாரித்ததில், அவர்களும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சுகாதாரத்துறையினர் மானாமதுரைக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து மீட்கப்பட்டவர்கள், பேருந்தில் இருந்தவர்கள், சிவகங்கையில் இறக்கிவிடப்பட்டோர் என அனைவரையும் அதே பேருந்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்தக் குழப்பத்தால் மானாமதுரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT