Published : 15 May 2020 05:51 PM
Last Updated : 15 May 2020 05:51 PM
கரோனா இயற்கையாக உருவாகியிருந்தால் கட்டுப்படுத்த முடியும் என்றும் அது மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் என்பதால் தீர்க்க சில ஆண்டுகள் ஆகும் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (மே 15) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி மக்கள் கரோனாவோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் தொற்று யாருக்கு வரும் என்பதைச் சொல்ல முடியாது. இது இயற்கையாக வந்திருந்தால் அதனைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் என்பதால் தீர்க்க சில ஆண்டுகள் ஆகும்.
எனவே மக்கள் கரோனாவிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சரி செய்வதற்கு பல துறைகளுக்கு ரூ.20 லட்சம் கோடி செலவு செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
அதன்படி ரூ.5 லட்சம் கோடிக்கான திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர், விவசாயிகள், கட்டுமானப் பணியாளர்கள், சிறு கடை, நடைபாதைக் கடை வைத்திருப்போர், வீடில்லாதவர்களுக்குத் திட்டங்களை அறிவித்துள்ளார்.
நான் ஏற்கெனவே சொன்னது போல நாட்டில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் உள்ள 13 கோடி மக்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 ஆயிரம் கொடுத்திருந்தால் ரூ.35 ஆயிரம் கோடிதான் ஆகியிருக்கும். இதனால் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.
ஆனால், மத்திய அரசு உணவுப் பொருட்களைத் தருவதாகக் கூறுகின்றனரே தவிர நிதி ஆதாரத்தைக் கொடுக்கவில்லை. ரூ.2 லட்சம் கோடி விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதாக கூறுகின்றனர். இது ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் கட்சி காலத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வங்கிகள் மூலம் பெற்று அப்போதே ரூ.7 லட்சம் கோடி கொடுத்துள்ளோம். மாநிலத்தின் நிதிநிலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். இது சம்பந்தமாக பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சருக்கு இன்று கடிதம் எழுத உள்ளேன். இரண்டு மாத காலம் மாநிலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனைச் சரி செய்வதற்கு மத்திய அரசு எங்களுக்கு நிதி ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும். மின்சாரத்துக்கான தொகையை நாங்கள் வசூலிக்க முடியாத காரணத்தால் அதற்கும் எங்களுக்கு காலக்கெடு வழங்க வேண்டும்.
மாநிலத்துக்கு மானியத்தை வழங்க வேண்டும் என்று கடிதம் அனுப்ப உள்ளோம். இதன் மூலம் மத்திய அரசு நம்முடைய மாநிலத்துக்கு உதவி செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளோம். ஏற்கெனவே பல மாநிலங்களில் அரசு ஊழியர்களின் ஊதியத்தை பாதியாக குறைத்துள்ளன. இந்த நடவடிக்கை மூலம் மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அதற்காக தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர்களுடன் பேசக் கோரிக்கை வைத்துள்ளேன். அவர்கள் கூறும் கருத்துகளைக் கேட்டு மே மாதம் ஊதியம் வழங்கும்போது, எந்த அளவுக்கு மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்யலாம் என்று முடிவெடுக்க உள்ளேன். புதுச்சேரி மாநிலத்தில் நான் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு அதற்கான ஊதியம் பெறவில்லை.
நான் மக்களவை, மாநிலங்களவையில் 23 ஆண்டுகள் இருந்தேன். அதற்கான பென்ஷன் தொகை மாதம் ரூ.45 ஆயிரம். அதில் 30 சதவீதம் தொகையை கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக ஒவ்வொரு மாதமும் கொடுப்பதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் கொடுக்க உள்ளேன். இதுபோல் பலர் முன்வந்து தங்களுடைய வருமானத்தில் இருந்து ஒரு பங்கை வழங்கினால் மாநிலத்தின் நிதி வருவாயைப் பெருக்க வாய்ப்பாக இருக்கும்’’.
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT