Published : 15 May 2020 04:44 PM
Last Updated : 15 May 2020 04:44 PM
அழகு நிலையம், சலூன் கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் திறந்துவிட்ட நிலையில், பொதுமுடக்க நேரத்திலும் வீட்டில் இருந்தவாறு உற்பத்தி செய்த மண்பாண்டங்களுக்கான சந்தை வாய்ப்பு இல்லாமலும், அதை வழக்கம்போல் கேரளத்துக்கு அனுப்பிவைக்க முடியாமலும் தவித்து வருகின்றனர் மண்பாண்டத் தொழிலாளர்கள்.
முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு மண்பாண்டப் பொருள்களைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. மக்கள், நாகரிகம் என்னும் பெயரில் பாரம்பரியப் பொருள்களில் இருந்து வெகுதூரம் நகர்ந்துவிட, மனித உடலோ நோய்களைச் சுமக்கும் கூடாரம் ஆகிவிட்டது. இன்று நம்மவர்களும் பெரிய பெரிய உணவகங்களுக்குச் சென்றால் மட்டும் ‘பாட் பிரியாணி’ ப்ளீஸ்...’ எனக் கேட்கும் மனநிலைக்குள் சென்றுவிட்டார்கள்.
மக்களிடம் மண்பாண்டப் பொருள்களின் மீதான மோகம் தமிழகத்தில் குறைந்திருந்தாலும், அதை உபயோகிப்பவர்கள் கேரளத்தில் அதிகம். இப்படியான சூழலில், பொதுமுடக்கத்தால் உற்பத்தி செய்து வைத்திருக்கும் மண்பாண்டப் பொருள்களைக் கேரளத்துக்கு அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர் மண்பாண்டத் தொழிலாளர்கள்.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் கோபி, ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கூறுகையில், “மண்பாண்டங்கள் செய்வதற்கு அருகாமையில் இருக்கும் குளங்களில் இருந்து களிமண் எடுத்துவந்தோம். அதற்கு அரசு தடை விதித்தது. நீண்டகாலக் கோரிக்கைக்குப் பின்னர் மத்திய - மாநில அரசுகள் நீராதாரங்களில் இருந்து களிமண் எடுக்க இப்போது அனுமதித்துள்ளன. ஆனால் தமிழக அரசு, அதற்கு மாவட்ட நிர்வாகத்தின் வழியாக அனுமதிபெற வேண்டும் என வழிகாட்டுகிறது.
அப்படி அனுமதிபெறக் குறைந்தது மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்காக கனிமவளத் துறை அலுவலகத்துக்கு நடையோ நடை என நடக்க வேண்டியுள்ளது. மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே அரசு அடையாள அட்டை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி பெற்று மண் எடுக்க அனுமதித்தால் இந்த நீண்ட கால அலைச்சல் குறையும்.
ஊரடங்கு நேரத்தில் பேருந்துகளே ஓடாதபோது மண் எடுக்க அனுமதி கேட்டு எப்படி ஆட்சியர் அலுவலகம் செல்ல முடியும்? இப்படியொரு சிக்கல் இருக்க, இன்னொரு புறத்தில் ஏற்கெனவே உற்பத்தி செய்துவைத்த மண்பாண்டப் பொருள்களே 10 லோடுவரை தேங்கிக் கிடக்கின்றன. குமரி மாவட்டத்தில் தலக்குளம், சுங்கான்கடை, பெருஞ்செல்வவிளை உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான கிராமங்களில் ஐயாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் மண்பாண்டத் தொழிலில் இருக்கின்றன. இங்கு உற்பத்தியாவதில் 80 சதவீதப் பொருள்கள் கேரளத்துக்கே செல்கின்றன.
ஊரடங்காலும் கரோனா தொற்று அச்சத்தாலும் கேரளத்துக்கு மண்பாண்டப் பொருள்களை அனுப்பிவைக்க முடியாத சூழல் இருப்பதால் தேங்கிக் கிடக்கும் மண்பாண்டப் பொருள்களை சந்தைப்படுத்த அரசு வழிவகை செய்ய வேண்டும். குமரியில் இப்போது கோடைமழை பெய்து வருவதால் ஏற்கெனவே செய்து காய வைத்திருக்கும் மண் பானை, மீன் சட்டி உள்ளிட்ட மண்பாண்டப் பொருள்கள் சேதமாகியும் வருகின்றன. எனவே இந்த விஷயத்தில் அரசு எங்களுக்கு விரைவில் நல்ல தீர்வைச் சொல்லும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT