Published : 12 Aug 2015 09:18 AM
Last Updated : 12 Aug 2015 09:18 AM
கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடையில் செயல்பட்டு வந்த மதுக்கடையை மூடக் கோரி கடந்த 31-ம் தேதி செல்பேசி கோபுரத்தின் மேல் ஏறி போராடிய காந்தியவாதி சசிபெருமாள் உயிர் இழந்தார். அவருக்கு சிலை எழுப்பி, நினைவரங்கம், நூலகம் அமைக்க ஆயத்தமாகி வருகின்றனர் இந்தக் கிராம மக்கள்.
மார்த்தாண்டம் அருகில் உள்ள உண்ணாமலைக்கடை கிராமத்தில் அரசுப் பள்ளி, தேவாலயம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டது. கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கடை அகற்றப்படவில்லை.
உண்ணாமலைக்கடை, பெரும்புழி, பயணம், பம்மம், ஆயிரங்தெங்கு ஆகிய 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து மது போதைக்கு எதிரான பொதுமக்கள் இயக்கத்தை ஏற்படுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 31-ம் தேதி இங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மது ஒழிப்புப் போராளி சசிபெருமாள் செல்பேசி கோபுரம் மீது ஏறி நின்று போராடிய போது உயிர் இழந்தார். அவர் உயிர்விட்ட உண்ணாமலைக்கடையில் அவருக்கு சிலை அமைத்து நினை வரங்கம், நூலகம் அமைக்க 5 கிராம மக்களும் தயாராகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராபர்ட் குமார் கூறியதாவது:
எங்கள் பகுதிக்கு வந்து போராட்ட களத்திலேயே உயிரைவிட்ட சசிபெருமாள் நினைவாக, அவருக்கு சிலை அமைத்து நினைவரங்கம், அவர் பெயரில் நூலகம், எங்கள் இயக்க அலுவலகத்துக்கு சசி பெருமாளின் பெயரும் வைக்க உள்ளோம்.
வரும் ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்து 5 கிராம மக்களும் சேர்ந்து பேசவுள்ளோம். இதுகுறித்து பொது மக்களுக்கு விளக்கி துண்டு பிரசுரம் விநியோகிக்கவும் உள்ளோம்.
அதே போல் காந்தியவாதி சசிபெருமாள் தன் உயிரை துறந்து, எங்கள் 5 கிராமங்களிலும் மது விலக்கைக் கொண்டுவந்துள்ளார். அதனால் இந்த 5 கிராம மக்களும் ஒவ்வோர் ஆண்டும் அவர் இறந்த ஜூலை 31-ம் தேதியை பூரண மதுவிலக்கு தினமாக கொண்டாட உள்ளோம்.
சசிபெருமாள் நினைவரங்கம், நூலகம் ஆகியவற்றை அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று திறக்கவுள்ளோம். 5 கிராம மக்களும், விரைவில் அவரது குடும்பத்தை சந்திக்க உள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT