Published : 15 May 2020 02:35 PM
Last Updated : 15 May 2020 02:35 PM
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து வடமாநிலப் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல வெள்ளிக்கிழமை ராமேஸ்வரத்திலிருந்து 24 பெட்டிகளுடன் சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25-ம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் மாநிலங்களில் பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து முதலானவை நிறுத்தப்பட்டன. இதனால் பல்வேறு மாநிலங்களில் வேலைக்காக புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முடிவு செய்து கால்நடையாக வரத் தொடங்கினர்.
புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பிலும் மாநிலங்கள் தரப்பிலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதையடுத்து, புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோர் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது.
அதன் அடிப்படையில் பிஹார் அரசும், ஜார்க்கண்ட் அரசும் தங்கள் மாநிலத் தொழிலாளர்களை தமிழகத்திலிருந்து அழைத்துவர சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து கூடங்குளம் அணுமின் நிலையம், தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் கட்டுமானப் பணியில் பணியாற்றிய 3500க்கும் மேற்பட்ட வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் இணையதளத்தில் பதிவு செய்திருந்தனர்.
முதற்கட்டமாக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு பிஹார் மாநிலத்திற்கு 1,332 தொழிலாளர்களுடன் முதல் சிறப்பு ரயிலும், புதன்கிழமை இரண்டாவது சிறப்பு ரயில் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 1,429 தொழிலாளர்களுடனும் புறப்பட்டுச் சென்றது.
இந்நிலையில், மூன்றாம் கட்டமாக பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்கான மூன்றாவது சிறப்பு ரயில் 24 பெட்டிகளுடன் ராமேஸ்வரத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றது.
53 நாட்களுக்குப் பின் ராமேஸ்வரம் ரயில்வே நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மட்டும் இயங்கியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT