Published : 15 May 2020 01:26 PM
Last Updated : 15 May 2020 01:26 PM
எத்தனை வயதானாலும் நாம் ஆச்சரியமாகப் பார்க்கும் விஷயங்களில் யானையும் ரயிலும் நிச்சயம் இருக்கும். அதிலும் ரயில் பாதையை ஒட்டியிருக்கும் குடியிருப்புவாசிகளுக்கு அவ்வப்போது பேரிரைச்சலுடன் செல்லும் ரயில் வண்டிகளின் சப்தமே சங்கீதக் கீர்த்தனைகள். இன்னும் சொல்லப்போனால் அவர்களின் கடிகாரமும் அதுதான். அதுபோலத்தான் ரயில் கேட்கீப்பர் பணியாளர்களுக்கும்!
புறநகர்ப் பகுதிகளிலும், வயல்காட்டுப் பகுதிகளின் ஊடாகவும் செல்லும் ரயில் பாதைகளில் கேட்கீப்பராக இருப்பவர்களுக்கு இந்தp பொதுமுடக்கம் எப்படி நகர்கிறது... ‘ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துற?’ என்னும் விவேக் நகைச்சுவையைப் போல ரயிலே ஓடாத இந்தத் தருணத்தில் அவர்களின் பொழுதுகள் எப்படி நகர்கின்றன என நாகர்கோவிலின் பறக்கை ரயில்வே கேட்டில், கேட்கீப்பராக இருக்கும் சந்திரகுமாரிடம் பேசினேன்.
“இது நாகர்கோவிலுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையில் இருக்கும் ரயில்வே கேட். கன்னியாகுமரிக்குப் போற எல்லா ரயிலும் இந்த ஒரே வழித்தடத்தில்தான் போக முடியும். சாதாரண நாட்களில் தினமும் 20 தடவையாச்சும் இந்த கேட்டைத் திறந்து மூடுவேன். இப்போ ஒரு நாளைக்கு அதிகபட்சமா இரண்டு தடவைதான் கேட்டைத் திறந்து மூடறேன். அதுவும்கூட இருப்புப் பாதை சோதனைக்காக துறைரீதியிலான ஓட்டத்துக்கு வரும் ரயில் மற்றும் டிராலிக்காகத் திறந்து விடுவதுதான்! என்னை மாதிரி ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ரயில் பாதைகளில் பணியில் இருக்கும் கேட்கீப்பர்களுக்கு வண்டிவராமல் இருப்பது ரொம்பவே போரடிக்கும் விஷயம்தான்.
சாதாரண நாட்களில் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை வரும் ரயிலுக்குக் கதவை அடைச்சு, திறப்பது, ரயில் போறதுக்கு பச்சைக்கொடி காட்டுவது, இடை, இடையே இருப்புப்பாதையைச் சோதிப்பது என ரொம்ப பரபரப்பா இருப்போம். அதுதான் தனிமையின் கொடுமை தெரியாமல் எங்களை வெச்சிருந்துச்சு. ஆனா இப்போ, அந்த மாதிரி சூழல் இல்லை. அதுக்காகவே நிறைய, பழைய வார இதழ்களைக் கொண்டு வந்து போட்டிருக்கேன். அதைப் படிச்சுதான் பொழுது கழியுது.
ரயிலுக்குப் பச்சைக்கொடி காட்டிட்டு நிக்கும்போது ரயிலுக்குள் இருந்து சிரிச்ச முகத்தோட நிறைய குழந்தைங்க கைகாட்டுவாங்க. பச்சைக் கொடி காட்டிட்டே அவங்களுக்கும் இதழோரப் புன்னகை செய்வேன். ஆயிரம் பேரைச் சுமந்து அசைந்து, ஆடிவரும் ரயிலை ரொம்பவே மிஸ் பண்றேன். பயணிகளைப் போலவே சகஜ நிலை திரும்பி ரயில் போக்குவரத்து சீராக நானும் காத்துக்கிட்டு இருக்கேன். ஏன்னா... ஓயாத அதன் சப்தம்தான் எங்களுக்கு எனர்ஜி டானிக்” என்று விடைகொடுத்தார் சந்திரகுமார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT