Last Updated : 15 May, 2020 12:06 PM

18  

Published : 15 May 2020 12:06 PM
Last Updated : 15 May 2020 12:06 PM

சீர்காழியில் கவலையோடு வந்த பெரியவரின் கண்ணீரைத் துடைத்த காவல் ஆய்வாளர்!

காவல் நிலையத்துக்கு கவலையோடு வந்த 70 வயது முதியவர் ஒருவரின் மனக்கவலையைப் போக்கி அவருக்கு மகிழ்ச்சியை நிலைக்கச் செய்திருக்கிறார் சீர்காழி காவல் ஆய்வாளர் மு.சதீஷ்.

சீர்காழி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருந்திருக்கிறார் பொறுப்பு ஆய்வாளர் சதீஷ். அப்போது அங்கு வந்த 70 வயதுடைய முதியவர் ஒருவர் தயங்கியபடி நின்றார். அவரை அழைத்து அமரவைத்து ஆசுவாசப்படுத்தி விசாரித்திருக்கிறார் சதீஷ்.

சன்னமான குரலில் முதியவர் தன்னைப் பற்றிக் கூறியிருக்கிறார். அவர் அரசு உயர் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி புற்றுநோயால் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மகன் பெங்களூரு ஐ.டி. கம்பெனியில் பணிபுரிகிறார். மருமகள், இரண்டு பேரக் குழந்தைகளோடு சீர்காழியில் இருக்கிறார். அவர்களோடுதான் தானும் வசித்து வருவதாகக் கூறிய பெரியவர், பிறகுதான் தனது மனக்கவலையை மெல்லப் பகிர்ந்திருக்கிறார்.

வயது முதிர்வு காரணமாக சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இருமல் மற்றும் சளி இருப்பதாகவும், கடந்த சில வாரங்களாக இருமல், சளி அதிகமாக உள்ளதால் தனக்கு கரோனா தொற்று வந்திருக்குமோ என்ற பயத்தில் மருமகள் இவரிடம் பேசுவது கிடையாது என்றும், பேரக் குழந்தைகளையும் இவரிடம் பேச அனுமதிக்காமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருப்பதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சலாக உள்ளது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்தப் பெரியவர் மனது உடைந்து அழத்தொடங்கிவிட்டார்.

யாருமே தன்னிடம் பேசாமல் இப்படி தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் தன்னால் வீட்டில் இருக்க முடியவில்லை, அதனால் தன்னை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட வேண்டும் எனக் கூறிவிட்டு மீண்டும் அவர் கண்கலங்கினார். அவருக்கு ஆறுதலும் தேறுதலும் சொன்ன ஆய்வாளர் சதீஷ், “கவலைப்படாதீங்க, என்னோட வாங்க, மொதல்ல உங்க மருமகளின் அச்சத்தைப் போக்க அரசு மருத்துவமனையில் போய் உங்களுக்குக் கரோனா பரிசோதனை செய்துவிட்டு அப்படியே வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன். உங்கள் மருமகளிடமும் நானே பேசுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

இதைக் கேட்டுப் பதறிப்போன பெரியவர், “ஜீப்பெல்லாம் வேண்டாம் சார், என் மகன், மகளைப் பத்தி மத்தவங்க தப்பா நினைப்பாங்க” என்று அந்த நிலையிலும் தனது மகன், மருமகளின் கவுவரம் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறார். இதனால் சீருடை கூட அணியாமல் சாதாரண உடையுடன் தனது இருசக்கர வாகனத்தில் பெரியவரை அழைத்துச் சென்ற சதீஷ், அரசு மருத்துவமனையில் அவருக்கு கரோனா முதல்கட்டப் பரிசோதனை செய்து அறிகுறிகள் எதுவும் இல்லை என்ற அரசு மருத்துவரின் சான்றோடு பெரியவரை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கிருந்த பெரியவரின் மருமருகளிடம் அரை மணி நேரத்துக்கும் கூடுதலாக சதீஷ் பேசியதில் கரோனா குறித்த அச்சம் மருமகளுக்கு விலகியது. மாமனாரின் பரிதாப நிலை புரிந்தது. மாமனாரைப் பார்த்து "சாரி மாமா" என்று சொல்லிக் கதறி அழுதிருக்கிறார். பேரக் குழந்தைகளும் தாத்தாவை ஓடிவந்து கட்டிப் பிடித்திருக்கிறார்கள்.

இப்போது அந்தப் பெரியவர் வீட்டுக்குள் பேரப் பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறாராம். பேரப் பிள்ளைகள் எப்போதும் தன்னை விட்டுப் பிரிவதில்லை, மருமகளும் அன்பாக நடந்து கொள்கிறார் என்று ஆய்வாளர் சதீஷை அலைபேசியில் அழைத்து நன்றி கூறியிருக்கிறார் பெரியவர்.

கரோனா காலத்தில் இப்படியான மனிதநேயச் சேவைகளையும் செய்துகொண்டிருக்கும் ஆய்வாளர் சதீஷ் போன்ற காவல் துறை
நண்பர்களுக்கு ஒரு சல்யூட் வைப்போம்!.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x