Published : 15 May 2020 10:48 AM
Last Updated : 15 May 2020 10:48 AM
கோயம்பேடு சந்தை விவகாரத்தில் அரசு அலசி ஆராய்ந்து முடிவு எடுத்ததாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (மே 15) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
"கோயம்பேடு சந்தை அதிகமானோர் கூடும் இடமாக இருப்பதால், அதனை இடமாற்றம் செய்ய வேண்டும் என கூட்டங்களில் வலியுறுத்தியபோது வியாபாரிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கோயம்பேடு சந்தையில் தொற்று பரவ ஆரம்பித்தவுடன் கடந்த 5-ம் தேதி வியாபாரிகள் சம்மதத்துடன் கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இதையடுத்து கடந்த 10-ம் தேதி திருமழிசையில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 5 நாட்களில் எடுத்த முடிவு புயல் வேகத்தில் செயல்படுத்தப்பட்டது.
கடந்த ஏப்.6 மற்றும் ஏப்.11 ஆகிய தேதிகளில் கோயம்பேடு மொத்த வியாபாரிகள் மற்றும் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கோயம்பேடு சந்தையை இடம் மாற்றினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த விவகாரத்தில் அரசு சமயோசிதமாக முடிவெடுக்க வேண்டும். திமுக போன்று எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியாது.
சென்னை மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளுக்கும் விற்பனை செய்யக்கூடிய இடமாக கோயம்பேடு சந்தை உள்ளது. கிட்டத்தட்ட 5,000 மெட்ரிக் டன் காய்கறிகள் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றது. கோயம்பேடு சந்தையை இடம் மாற்றினால் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், காய்கறிகளை கொள்முதல் செய்ய முடியாமல், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
மக்கள், வியாபாரிகள் நலனை கருத்தில்கொண்டு எடுத்த முடிவை திமுக தலைவர் ஸ்டாலின் கொச்சைப்படுத்தும் விதமாக, வியாபாரிகள், மக்கள் மீது அரசு பழிபோடுவதாக குற்றம்சாட்டுகிறார். பழிபோட்டுத் தப்பிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. உளப்பூர்வமாக முதல்வர் இந்த முடிவை எடுத்தார்.
கடந்த காலத்தில் ஹேமாவதி ஆற்றின் குறுக்கே அணை கட்டும்போது, சர்க்காரியா கமிஷன் தங்கள் மீது பாய்ந்துவிடும் என்று, உடனடியாக விவசாயிகளை வழக்கை வாபஸ் வாங்க வலியுறுத்தியது திமுக. பழியை விவசாயிகள் மீது போட்டனர். அடுத்தவர்கள் மீது திமுக பழிபோடுவதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. எல்லை தாண்டி செல்லும் மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என அப்போதைய முதல்வர் கருணாநிதி கூறினார். இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட விஷயத்தில் காங்கிரஸ் மீது பழியை போட்டது திமுக" என தெரிவித்தார்.
இதையடுத்து, அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கோயம்பேடு சந்தை தொடர்பாக அரசு காலதாமதமாக முடிவெடுத்ததா?
கிட்டத்தட்ட 5 முறை கோயம்பேடு சந்தை வியாபாரிகளுடன் விவாதித்தோம். எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியாது. அலசி, ஆராய்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. வியாபாரிகள் விற்பனை செய்யவில்லையென்றால் அனைத்தும் பாதிக்கப்படும். அனைத்தையும் யோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. கோயம்பேடு சந்தையில் தொற்று பரவியதற்கு வியாபாரிகளும், பொதுமக்களும் காரணமல்ல. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்பு இந்த முடிவெடுக்கப்பட்டது.
அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை என்று வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனரே?
அது தவறான குற்றச்சாட்டு. அரசியல் ரீதியாக சிலர் மாறுபட்ட கருத்தை சொல்லலாம். ஆனால் கூட்டம் நடைபெற்ற தேதி பொய் சொல்லாது. அரசு எடுத்த முயற்சியால் தான் இந்த முடிவு எட்டப்பட்டது. அரசு எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றால் மற்றவர்கள் குற்றம் சொல்லலாம். 7 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. கோயம்பேடு சந்தையில் மக்கள் காய்கறிகளை வாங்க கூடியதால் தொற்று வந்தது. அரசு தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT