Published : 15 May 2020 10:04 AM
Last Updated : 15 May 2020 10:04 AM

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர்: குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி; முதல்வர் உத்தரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

திருச்சியில் கரோனா தொற்று நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 15) வெளியிட்ட அறிக்கையில், "திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சிறுகமணி மேற்கு கிராமத்திலுள்ள சேதுராப்பட்டி அரசினர் பொறியியல் கல்லூரியில், விமானம் மூலம் வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகள், தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் குமார், கடந்த 13 ஆம் தேதி தன்னுடைய பணியை முடித்து வீடு திரும்பும் போது, மதுரை - சென்னை பைபாஸ் சாலையில், தனியார் வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

கரோனா வைரஸ் தொற்று நோய் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குமாரின் குடும்பத்திற்கு சிறப்பினமாக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x