Published : 15 May 2020 09:49 AM
Last Updated : 15 May 2020 09:49 AM

இது தோழமை சுட்டுதல்: தயாநிதி மாறன் பேச்சுக்கு திருமாவளவன் எதிர்ப்பு

இது தோழமை சுட்டுதல் என்று தயாநிதி மாறன் பேச்சுக்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நேற்று (மே 13) தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைக் கொடுக்கச் சென்றனர் திமுக எம்.பிக்கள். இதில் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்தச் சந்திப்பின் போது தங்களை தலைமைச் செயலாளர் அவமானப்படுத்தி விட்டதாக திமுக எம்.பிக்கள் பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தனர்.

முதலில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு நடந்தவற்றை விவரித்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது "This is the problem with you people" என்று தலைமைச் செயலாளர் எங்களைப் பார்த்து சொன்னார். இதற்கு என்ன அர்த்தம் தயா என்று தயாநிதி மாறனிடம் கேட்டார். அதற்கு "எங்களை மூன்றாம் தர மக்களைப் போல் நடத்தினார். அந்த வார்த்தையை வாயில் சொல்ல முடியவில்லை. நாங்கள் தாழ்த்தப்பட்ட மக்களா?" என்று விளக்கமளித்து பின்பு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திப் பேசினார் தயாநிதி மாறன்.

தயாநிதி மாறனின் இந்தப் பேச்சு, திமுக கூட்டணி கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால், அந்த வேகத்தில் 'நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா'என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது. இது தோழமை சுட்டுதல்"

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x