Published : 14 May 2020 09:49 PM
Last Updated : 14 May 2020 09:49 PM
ஊரடங்கால் இடைக்கால உத்தரவுகளை நீட்டித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குற்ற வழக்குகளின் விசாரணையை முடிப்பதற்கான காலக்கெடுவிற்கு பொருந்துமா? பொருந்தாதா? என்பது தொடர்பாக உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் இருவர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க இரு நீதிபதிகள் கொண்ட அமர்வை தலைமை நீதிபதி அமைத்துள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நீதிமன்றங்களின் பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து நீதிமன்றங்களின் இடைக்கால உத்தரவுகளின் காலக்கெடுவை நீட்டித்து உச்ச நீதிமன்றம் மார்ச் 23-ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 167 (2)-ல் குற்ற வழக்குகளில் குறிப்பிட்ட நாட்களுக்குள் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது பொருந்துமா? பொருந்தாதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
உத்தரவு பொருந்தாது
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சேட்டு, தன் மீதான வழிப்பறி வழக்கில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கலாம் எனக் கூறியிருப்பதை சுட்டிக்காட்டி ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஊரடங்கு காரணமாக காலக்கெடுவை நீட்டித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விசாரணையை முடிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை என்று கூறி சேட்டுக்கு ஜாமீன் வழங்கினார்.
மாறுபட்ட தீர்ப்பு
சேட்டு கூறிய காரணத்துடன் சிலை திருட்டு வழக்கில் ஜாமீன் கேட்டு காசி என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணையை முடிப்பதற்கான காலக்கெடுவிற்கும் பொருந்தும் என்று கூறி காசியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் விசாரணையை முடிப்பதற்கான காலக்கெடுவை அடிப்படையாக வைத்து ஜாமீன் கோரும் வழக்குகளில் உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்கள் முடிவெடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
அமர்வு அமைப்பு
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் கால நீட்டிப்பு உத்தரவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 167 (2) பிரிவுக்கு பொருந்துமா? என்பதை முடிவு செய்ய உயர் நீதிமன்றக் கிளை நிர்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைத்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டுள்ளார்.
பொதுவாக இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கும் போது இறுதி முடிவெடுக்க இன்னொரு அமர்வு ஏற்படுத்துமாறு தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்வது வழக்கம். ஆனால் இந்த வழக்கில் உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக பரிந்துரை வராத நிலையில் தலைமை நீதிபதியே தாமாக முன்வந்து அமர்வை அமைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT